செய்தி டிவி சேனல் அலுவலகத்தில் புகுந்து, பட்டாக்கத்தியைக் காட்டி மர்ம நபர் தாக்குதல். – VIDEO-

 

ராயபுரம் கல்மண்டபம் பகுதியில்  செய்தி நிறுவனமான சத்தியம் தொலைக்காட்சி  இயங்கி வருகிறது. இன்று மாலை 7 மணியளவில் குஜராத் பதிவெண் கொண்ட ஷிஃப்ட் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, அலுவல் ரீதியாக வந்ததாக அந்த மர்ம நபர் கூறியதால் அலுவலக விருந்தினர் என நினைத்த ஊழியர்கள் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்துள்ளனர். வரவேற்பறைக்கு சென்ற அந்த மர்ம நபர் பேசிக்கொண்டிருக்கும்போது தனது கையிலிருந்த கிட்டார் பேக்கை திறந்து அதனுள் பெரிய பட்டாக்கத்தி மற்றும் கேடயத்தை எடுத்து வரவேற்பறையில் இருந்த கண்ணாடி ,மேஜை, டிவி, இருக்கைகள், கம்ப்யூட்டர், கதவு என அங்கு இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.

அலுவலக ஊழியர்கள் அவரை பிடிக்க முற்படும்போது, “அருகே வந்தால் கொலை செய்து  விடுவதாக மிரட்டிய அவர்,  வரவேற்பறையில் இருந்த அனைத்து பொருட்களையும் கத்தியால் வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.
உடனடியாக ராயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தவுடன் காவலர்கள் விரைந்து வந்து அந்த மர்ம நபரை பிடித்து அவரிடம் இருந்த பட்டாக்கத்தி, கேடயம் மற்றும் குஜராத் பதிவெண் கொண்ட ஷிப்ட் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநரை கொலை செய்ய வேண்டும் எனக் கூறிக்கொண்டு மர்ம நபர் காரில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Contact Us