துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு பயப்படாதே என கூறிய தாலிபான்

 

செய்தி நிறுவனத்துக்குள் திடீரென புகுந்த தலிபான்கள் அங்கிருப்பவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, டோலோ நியூஸ் நிறுவன ஆப்கானிய நிருபர் மற்றும் கேமராமேன் ஆகியோர் காபூலில் தலிபான்களால் தாக்கப்பட்டனர். நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் தலிபான்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கிருக்கும் சிலரை தாக்கி வருகின்றனர். ஜெர்மன் ஊடக அமைப்பான டாய்ட்ஷ் வெல்லேயில் (டிடபிள்யூ) பணிபுரியும் நிருபரின் குடும்ப உறுப்பினரை கடந்த சில நாட்களுக்கு முன் தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனத்திற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய தலிபான்கள், செய்தி வாசிப்பாளரின் பின்னால் நின்று கொண்டு அச்சுறுத்தினர். அதிர்ச்சியடைந்த செய்தி வாசிப்பாளரிடம், ‘பயப்படாதே’ என்று மிரட்டினர். இந்த நிகழ்வுகள் யாவும், அந்த சேனலில் ஒளிபரப்பப்பட்டது. இதனை சர்வதேச ஊடகங்களும் ஒளிபரப்பி வருகின்றன. தலிபானின் கையில் சிக்கியுள்ள ஆப்கானில், பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குரியாகி உள்ளதாக ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Contact Us