தமிழ் பேசும் மக்கள் அவதானம்! வரும் நாட்கள் ஆபத்தாகலாம்…

கொழும்பை சிங்கள போராட்டக்காரர்கள் சூழ்ந்துத்துள்ள நிலையில் வரப்போகும் காலத்தில் ராஜபக்ஸர்கள் தமது அரசியலை காத்துக்கொள்ள தமிழ் பேசும் மக்கள் மீது வன்முறையை திருப்பிவிடலாம். அதற்கான சந்தர்ப்பத்தை தமிழ் தரப்புகள் கொடுத்துவிடக்கூடாது என குணா கவியழகன் எச்சரிக்கிறார்.

YouTube தளத்தில் தொடர்ச்சியாக அரசியல் அறிவியக்க கருத்தாடலை நிகழ்த்திவரும் அவர், கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டை முன்வைத்து பேசிய முக்கிய கருத்தாடல் கவனத்திற்குரியது. அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயமாவது,

ஆயுதங்கள் சகிதம் பெரும் மக்கள் திரளோடு நாடாளுமன்றம் முற்றுகையிடப்படும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கிறார். கொழும்பு நகரைச்சுற்றி பெரும் அணிதிரள்வு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

மக்கள் பாதுகாப்பு அமைச்சர், கலந்து கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இதனால் கொழும்பில் பதட்டமான நிலமை ஏற்பட வாய்புள்ளது.

2022 இற்கான பஜட் இரண்டாயிரத்து ஐநூற்றி ஐந்து பில்லியன் ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த ஆண்டு தொடக்கம் கூடிச் செல்லும் பஜட் இம்முறை கடந்த ஆண்டைவிட முப்பத்தி மூவாயிரம் மில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்நாட்டின் பொருளாதார நிலமை பேரிழப்பைச் சந்தித்துள்ளது என்பதை உணரமுடிகிறது. இதற்கான பல காரணங்கள் பல்வேறு தரப்பினரால் பலவாறாக கூறப்பட்டாலும் அண்ணளவான கணிப்பீட்டின்படி 6.7 வீதம் பாதுகாப்பிற்கான செலவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்போது யுத்தம் இல்லாத நாட்டில் பாதுகாப்பிற்காக இந்த நிதி எந்த நாட்டோடு யுத்தம் செய்ய? இவ்வாறு நிதியினை பாதுகாப்பிற்கு ஒதுக்கினால் நாட்டில் உற்பத்தி வளர்ச்சி அடையமுடியாது.

ஒரு விகிதம் பாதுகாப்பு செலவு அதிகரித்தால் நாட்டின் மொத்த உறுபதியில் ஒன்பது வீத வீழ்ச்சி ஏற்படும் என்பது பொருளியல் கணக்கு.

இதனை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும்கூட வெளிப்படையாக கூறுவதற்கு தயங்குகின்றனர். யுத்த அச்சுறுத்தல் இல்லாத நாட்டில் நாடு படைத்துறைக்கு செலவு செய்வதை குறைத்தால் நாடு வளர்ச்சியடையும்.

படைத்துறை செலவு மட்டுமே மறு உற்பத்தியை தராத செலவு. இரண்டாம் உலக யுத்தத்தில் அணுஆயுதத்தால் அழிவைச்சந்தித்த யப்பான் யுத்தசெலவிற்கு செலவழித்த பெருந்தொகையை உற்பத்திக்கு பயன்படுத்தியதால் தான் இன்று பொருளாதார வல்லரசாக மிகவும் உயர்வு நிலையை அடைந்துள்ளது.

ஏதாவது காரணங்களால் யுத்தம் வேறு நாடுகளுடன் ஏற்பட்டால் அதற்கான பாதுகாப்பினை அமெரிக்கா வழங்கவேண்டும் என யப்பான் பாதுகாப்பு ஒப்பந்தத்தினை அமெரிக்காவுடன் செய்து கொண்டு தனது பாதிகாப்பு செலவை பூச்சிய நிலைக்கு ஏறத்தாள கொண்டுவந்ததன் விளைவாக அணுஆயுதத்தைச் சந்தித்த ஜப்பான் மாபெரும் பொருளாதார வளர்ச்சியினை அடைந்தது.

அதன் பெறுபேறுதான் இன்று அமெரிக்க டொலரை அதிகளவில் வைத்திருக்கும் நாடு ஜப்பான் என்ற நிலையை அடைந்தது. ஆனால் பட்டினி சாவினை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடான இலங்கை மிகவும் அதிகளவில் பாதுகாப்புச் செலவிற்கு நிதியினை ஒதுக்கியுள்ளது.

மக்களுடன் தொடர்பான சேவைகளுக்கு இம்முறை ஒதுக்கப்பட்ட நிதி பாதுகாப்பு செலவைவிட மிகவும் குறைவாகும்.

இது அரசிற்கு மிகவும் நெருக்கடியான நிலை. இந்நிலை நாட்டில் ஒரு கொந்தளிப்பினை ஏற்படுத்தும். இது தென்னிலங்கையில் வெளிப்பட இருக்கிறது.

தென்னிலங்கைத் தரப்பில் ஏற்படப்போகும் கொதிப்பான அரசியல் முக்கியமான நிகழ்வாகும். அரசு மீது மக்களுக்கு ஒர் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த சந்தர்ப்பத்தினை சஜித் பிரேமதாஸ தரப்பினர் பயன்படுத்தவுள்ளனர்.

அரசிற்கும் அரச எதிர்தரப்பிற்கும் இடையில் முரண்பாடும் வன்முறை வடிவமும் எடுக்கப்பட்டால் அதனை திசை திருப்புவதற்காக அரசாங்கம் அவர்களை ஒடுக்குவதை விடுத்து தமிழ் பேசும் மக்கள் மீது ஏதாவது திசை திருப்பலை,தாக்குதலை உருவாக்கும்.

ஆகையால் இதற்கான காரணமாக தமிழ் தரப்பில் யாரும் இருந்துவிடக் கூடாது. தமிழ் அரசியல்கட்சிகளோ, அல்லது அரசியல் சார்ந்து இயங்கும் அமைப்புக்களோ எதிர்ப்பு அரசியல் போராட்டம் என்று இந்த சமயத்தில் தொடங்கினால் அதனை ஏற்றுக்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

மக்களும் சிவில் அமைப்புகளும் விழிப்புடன் இருக்க வேண்டும். எமக்கான அரசில் பாதை எது என புரிந்து கொள்ளமுடியாத தமிழ் அரசியல் தலைவர்களுடன் இருக்கின்ற தமிழ்,முஸ்லிம் மக்கள் இவ் வன்முறைகள் தொடர்பில் மிக கவனமான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தென்னிலங்கை கொந்தளிப்பின் விளைவு தமிழ்மக்கள் மீதோ முஸ்லிம் மக்கள் மீதோ வன்முறையாக திருப்பப்படாது இருக்கவேண்டியது முக்கியம் அடுத்து இதில் தமிழ் மக்களுக்கான வாய்ப்பை கனியவைத்து கையாளும் உபாயத்தை வாக்குத்துக்கொள்ள வேண்டும்.

Contact Us