கடந்த திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு தடையின்மை சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் (Recognition) வழங்குவதில் ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை லஞ்சப் பணம் கைமாறியுள்ளதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் (Association) பொதுச்செயலாளர் நந்தகுமார் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். முந்தைய ஆட்சியில் ஒரு தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் 35 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், லஞ்சப் புகார்கள் மீது அரசு எடுக்க உள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார். “கடந்த ஆட்சியில் தவறு நடந்திருந்தாலும் சரி, தற்போது யாராக இருந்தாலும் சரி, லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களுடன் புகார் கடிதம் அளித்தால் நிச்சயமாக ஒரு விசாரணைக் கமிட்டி அமைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் உறுதியளித்தார். மேலும், அடையாளம் தெரியாத நபர் (Anonymous) என்றில்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது முறையான கடிதம் மூலமாகவோ தன்னை அணுகி புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மூன்று நேரடி உதவியாளர்கள் (PA) மூலமாக இந்த லஞ்சப் பணம் பெறப்பட்டதாக நந்தகுமார் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “அவர் முன்னாள் அமைச்சராக இருந்தாலும் சரி, அல்லது அவரின் நேரடி உதவியாளர்களாக இருந்தாலும் சரி, லஞ்சப் புகார் குறித்து முறையான விண்ணப்பம் வரட்டும்; விசாரணை நடத்தி லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் யாரையும் தப்பவிடாமல் அரசு சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று திட்டவட்டமாகக் கூறினார். தியாகராய நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட அலுவலகத்தில் தான் பள்ளிகளுக்கான புத்தகங்கள், பெல்ட் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டதாகவும் தனியார் பள்ளிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இனிவரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடக்கக் கூடாது என்பதற்காகவே தற்போதைய அரசு பல துரித மற்றும் வெளிப்படையான (Transparent) நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், தனியார் பள்ளிகள் லஞ்சமாகக் கொடுக்கும் இந்த பெரும் தொகை தற்போது மிச்சமாகி உள்ளதால், அதற்குப் பதிலாக அவர்கள் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவ முன்வர வேண்டும் என்றும், ஏழை மாணவர்களுக்கான கட்டண அமைப்பை (Fee structure) குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை அரசே கட்டிக் கொடுத்தாலும், அதன் பராமரிப்புப் பணிகளுக்கோ, மாடல் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் (Aided schools) வளர்ச்சிளுக்கோ தனியார் பள்ளிகள் கைகோர்த்து உதவ வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் இந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.