Posted in

தைரியம் இருந்தா ஓப்பனா அறிவிக்கட்டும். –  அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்க சவால்!

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள சூழலில், மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் திரைமறைவில் கைகோர்க்க முயன்றதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “தைரியம் இருந்தால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கூட்டணியை மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்கட்டும்” என்று அவர் அதிரடி சவால் விடுத்துள்ளார்.

இரு கட்சிகளும் தங்களின் குடும்பங்களையும், பல ஆண்டுகளாகச் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும் தற்காத்துக் கொள்வதற்காகவே, எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கையை வைத்துக் குறுக்கு வழியில் கூட்டு ஆட்சி அமைக்கத் திரைமறைவு உடன்படிக்கை (Agreement) செய்துகொண்டதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார். “முன்னாள் திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி பேசியதன் மூலமாகவே இவர்களின் திரைமறைவு நாடகம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டு தேர்தல்களில் நேரெதிராக நின்றவர்கள், இப்போது தங்களின் சுயநலத்திற்காகக் கைகோர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான், அதிமுக மற்றும் திமுகவில் 40, 50 ஆண்டுகள் பயணித்த மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுப் பனையூரில் தினந்தோறும் தவெக-வில் இணைந்து வருகின்றனர்” என்று அவர் விவரித்தார்.

மறுபுறம், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரைத் தவெக அரசு மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கிளம்பியுள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் தெளிவான விளக்கமளித்தார். “திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ என்ற பெயர் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது; ஏதோ அடுத்த முதலமைச்சரை உருவாக்குவதற்கான திட்டம் போல மக்கள் நினைத்துக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் வாரிசு அடிப்படையில் தான் அவர்கள் வீட்டில் ஏற்கனவே அடுத்த தலைவர் தயாராகிக் கொண்டிருக்கிறாரே, பிறகு எதற்கு இந்த பெயர்? இது திறன் மேம்பாட்டுத் துறை (Skill Development) சார்ந்த திட்டம் என்பதால், மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் ‘திறன் மேம்பாட்டுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதில் எவ்வித ஸ்டிக்கர் அரசியலும் இல்லை” என்று அவர் சாடினார்.

தமிழகத்தில் வரவிருந்த பெரும் முதலீடுகள் அனைத்தும் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குச் செல்வதாக திமுகவினர் குற்றம் சாட்டுவதற்கும் அமைச்சர் நிர்மல் குமார் தகுந்த பதிலடி கொடுத்தார். “தவெக அரசு அமைந்து வெறும் நான்கு வாரங்களே ஆகிறது; ஒரு பெரிய நிறுவனம் முதலீடு செய்கிறது என்றால் அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் (Feasibility Study) பல மாதங்களுக்கு முன்பே நடத்தப்பட்டிருக்கும். கடந்த திமுக ஆட்சியில் தொழில் தொடங்க வரவவர்களிடம், ‘முன்னாள் முதலமைச்சரின் பையனைப் பார்க்க வேண்டும், மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும், அவர்களின் நண்பர்களைப் பார்க்க வேண்டும்’ எனப் பல அடுக்கதிகாரக் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன; அதுமட்டுமின்றி நிறுவனங்களில் பார்ட்னர்ஷிப், ஸ்கிராப் மற்றும் ரா மெட்டீரியல் காண்ட்ராக்ட் எனப் பங்கு கேட்டதாலேயே விரக்தியடைந்து பல நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறின. இனி அந்த நிலை இருக்காது, சிங்கிள் விண்டோ சிஸ்டம் மூலம் தொழில் முதலீடுகள் முறைப்படுத்தப்படும்” என்று அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.