Posted in

சட்டசபையில் தவெக Vs திமுக மோதல்: உடனே வெளியேற்றுங்கள்! – அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைக் காவலர்களைக் கொண்டு உடனடியாக வெளியேற்ற சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையை உடனே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் திமுகவினர் பிடிவாதம் பிடித்ததே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

முன்னதாக பேரவை தொடங்கியதும் சபாநாயகர் உறுப்பினர்களுக்குச் சில முக்கியக் குறிப்புகளை வழங்கினார். சட்டமன்ற நடவடிக்கைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், கடந்த வெள்ளிக்கிழமை அவையில் சில உறுப்பினர்கள் செய்த முக பாவனைகள், சைகை மொழிகள் சமூக வலைத்தளங்களில் பரவி அவையின் மாண்பைக் குறைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இத்தகைய கண்ணியக் குறைவான செயல்களில் இனி ஈடுபட்டால் அது அவையின் உரிமை மீறலாகக் கருதப்பட்டுச் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சுருக்கமாகவும் தெளிவாகவும் ‘ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக’ பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அவையில் “ஜீரோ ஹவர்” மற்றும் கேள்வி நேரம் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று காலையிலேயே தாங்கள் கொடுத்த உரிமை மீறல் மனுவை இப்போதே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனச் சபாநாயகரை வற்புறுத்தினர். அதற்குச் சபாநாயகர், “மனு எனது ஆய்வில் உள்ளது; அவை முடிவதற்குள்ளாக உங்களுக்குப் பேச நிச்சயமாக உரிய நேரத்தில் வாய்ப்பு அளிக்கப்படும், இப்போது மற்ற அலுவல் நடப்பதால் அமைதி காக்கவும்” என்று பலமுறை கனிவாகக் கேட்டுக்கொண்டார். ஆனால், சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுகவினர், அவையின் நடுப்பகுதிக்கு வந்து தொடர் முழக்கங்களை எழுப்பி முரண்டு பிடித்தனர்.

“எப்போது விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பது சபாநாயகராகிய என்னுடைய உரிமை; என்னை யாரும் இங்கே கட்டாயப்படுத்த முடியாது” என்று சபாநாயகர் எச்சரித்த நிலையிலும் திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினர். அவ்வாறு வெளியேறியவர்கள், சட்டமன்ற வளாகத்திற்குள்ளேயே நின்று கொண்டு தவெக அரசுக்கு எதிராகப் பலத்த கோஷங்களை எழுப்பினர். பேரவை வளாகத்திற்குள் உரத்த குரலில் முழக்கமிட்டு அவையின் அமைதியைக் கெடுத்ததால் ஆத்திரமடைந்த சபாநாயகர், “வெளியே வளாகத்திற்குள் நின்று கோஷம் போடுபவர்களை அவைக் காவலர்கள் உடனடியாகப் பிடித்துப் பேரவை வளாகத்தை விட்டே வெளியேற்றுங்கள்” என்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்தால் சட்டசபை வளாகமே சில மணி நேரம் பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது.