Posted in

பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் புகார்: பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் அதிரடி கைது!

பிரபல பங்குச்சந்தை வர்த்தகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர், தனியார் தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் அத்துமீறல் மற்றும் மிரட்டல் புகாரின் பேரில் சென்னை தனிப்படை காவல்துறையினரால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதைத் தொடர்ந்து அவரைச் சென்னைக்கு அழைத்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், வேலை வாய்ப்பு தொடர்பாகப் பி.ஆர். சுந்தரை அணுகியபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தவறாக நடக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஜூன் மாதம் இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகக் கூறித் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, சுமார் 3 மணி நேரம் அடைத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் பேரில் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் பி.ஆர். சுந்தர் மீது பாலியல் வன்கொடுமைத் தடுப்பு, பெண்களுக்கெதிரான குற்றங்கள், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், பெங்களூருவில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து அதிரடியாகக் கைது செய்தனர்.

அதேவேளையில், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பி.ஆர். சுந்தர் மறுத்துள்ளார். சொத்துத் தகராறு காரணமாகத் திட்டமிட்டுத் தன் மீது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு இது என்றும், நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொண்டு உண்மைய நிலைநாட்டப்படும் என்றும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், இக்கைது சம்பவம் பங்குச்சந்தை வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.