திரையுலகில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யின் விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தற்பொழுது தீவிர விசாரணைப் பிரிவில் உள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்துள்ள 12 பக்கங்கள் கொண்ட விவாகரத்து மனுவின் விவரங்கள் அண்மையில் ஊடகங்களில் கசிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், அந்த மனுவின் குறிப்பிட்ட ’11-வது பாயிண்ட்’ விவகாரத்தை கையில் எடுத்துள்ள திமுக என்ஆர்ஐ (NRI) மற்றும் ஐடி விங்கினர், சமூக வலைத்தளங்களில் புதிய விவாதத்தையும் அரசியல் மோதலையும் பற்ற வைத்துள்ளனர்.
சங்கீதா நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தனது கணவர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பில் (Adulterous Relationship) இருந்ததை தான் கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்தத் தொடர்பை துண்டித்துக் கொள்வதாக விஜய் தனக்கு உறுதியளித்த போதிலும், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அந்த நடிகையுடனான நெருக்கத்தை அவர் தொடர்ந்து நீட்டித்து வந்ததாக மனுவில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும், அந்த நடிகை விஜய்யுடன் வெளிநாடுகளுக்குச் சென்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தமக்கும் தன் குழந்தைகளுக்கும் பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவாகரத்து மனுவின் 11-வது சரத்தில், “தற்போதைக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு அந்த நடிகையின் பெயரை நான் இதில் குறிப்பிடவில்லை; ஆனால், வழக்கு விசாரணையின் போது தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கும் முழு உரிமையையும் நான் தக்கவைத்துக் கொள்கிறேன்” என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளார். இந்த 11-வது பாயிண்டைத்தான் தற்பொழுது திமுகவின் வெளிநாடு வாழ் பிரிவினர் (NRI Wing) மற்றும் ஆதரவாளர்கள் எக்ஸ் (X) தளத்தில் கடுமையாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். “யார் அந்த 11-வது பாயிண்ட் நடிகை? தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் மற்றும் தவெகவினர் பொதுவெளியில் விளக்கம் அளிக்கட்டும்” என்று அவர்கள் போஸ்டர்களைப் பகிர்ந்து வம்புக்கு இழுத்து வருகின்றனர்.
முன்னதாக, அண்மையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு விஜய்யும் நடிகை த்ரிஷாவும் ஒன்றாக வந்ததும், தவெகவின் புதிய ஆட்சியில் த்ரிஷாவின் ‘கருப்பு’ திரைப்படத்திற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகக் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு முதல்வர் விஜய் சிறப்பு அனுமதி வழங்கியதும் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. திமுகவினரின் இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்களுக்கு தவெக தகவல் தொழில்நுட்ப அணியினர் மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்து வருகின்றனர். சட்டமன்றத்தில் தவெகவின் அசுர வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஒரு முதலமைச்சரின் குடும்பப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காக திமுகவினர் தரம் தாழ்ந்த முறையில் பயன்படுத்தி வருவதாக அவர்கள் சாடி வருகின்றனர்.