தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பதில் அளித்துப் பேசினார். அப்போது, கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெற்ற தேர்தல் தோல்வியைக் குறிவைக்கும் விதமாக, “நக்கலும் நையாண்டியும் எங்களுக்கும் பண்ணத் தெரியும்” என்று கூறி ஒரு குட்டி ஸ்டோரியைப் பகிர்ந்து சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசினார். முதலமைச்சர் விஜய்யின் இந்த சினிமாத்தனமான பேச்சுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகக் கடுமையான மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில், “சார் நான் ஒரு ஆக்ஷன் பண்ணிக்கலாமா!? ‘நாாளைய தீர்ப்பு’ திரைப்படம் தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் தமிழ்நாட்டின் முதலமைச்சரானது வரை திரு. விஜய் அவர்களின் நடிப்பு மிகவும் நன்றாகவே வளர்ந்துள்ளது, அதற்கு என் வாழ்த்துக்கள்!! ஆனால், சட்டமன்றத்திற்குள் வந்து பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், சினிமா போல குட்டி கதை சொல்வதுமாகச் சட்டமன்றத்தை ஒரு ‘Shooting Spot’ ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல” என்று மிகத் காரசாரமாகச் சாடியுள்ளார்.
மேலும், சட்டமன்ற உரையின் போது, “நான் 5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல” என்று எதிர்க்கட்சிகளை நோக்கி முதலமைச்சர் விஜய் அடித்த பஞ்ச் டயலாக்கை கையில் எடுத்து ஜெயக்குமார் வம்புக்கு இழுத்துள்ளார். “முதலமைச்சர் அவர்களே, அதையேதான் நாங்களும் உங்களிடம் கேட்கிறோம்; தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான மின்வெட்டு, தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிப் போராடும் விவசாயிகளின் பிரச்சினைகள், மாநிலத்தில் தினசரி அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றைப் பற்றி உங்களால் ஒரு 5 நிமிஷமாவது சட்டமன்றத்தில் பேச முடிந்ததா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இறுதியாக, “நீங்கள் அள்ளி வீசிய தேர்தல் வாக்குறுதிகள் பற்றியோ அல்லது மக்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றியோ 5 நிமிடம் கூடப் பேசத் துப்பில்லாத முதலமைச்சர் விஜய் அவர்களே, தயவுசெய்து உங்களது ‘Reels’ உலகத்தை விட்டுவிட்டு ‘Reality’ எனப்படும் நிஜ உலகத்திற்கு வாருங்கள்!” என்று ஜெயக்குமார் மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார். தவெக – திமுக இடையே சட்டமன்றத்தில் மூண்ட அரசியல் யுத்தத்தில், தற்பொழுது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் குதித்து முதலமைச்சரின் நிர்வாகத் திறனைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.