Posted in

எந்த முதல்வரும் செய்யாததை செய்து வரலாற்றை மாற்றி எழுதிய CM: பொதுமக்களோடு மாரத்தான் போட்டியில் ஓடிய முதல்வர் விஜய்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ‘ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ (Start Run, Stop Drugs) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். போட்டியைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், யாரும் எதிர்பாராத விதமாக முதலமைச்சர் விஜய்யும் விளையாட்டு வீரர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஓடியது அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

விடிவதற்கு முன்பே அதிகாலை வேளையில் இந்த மாரத்தான் ஓட்டம் சென்னை அண்ணா நினைவிடம் அருகே தொடங்கியது. முதலமைச்சருடன் இணைந்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த், நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ஓடினர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ ஓடிய முதலமைச்சர் விஜய், ஓடிக்கொண்டே தண்ணீர் குடித்ததுடன், தனக்கு அருகில் சோர்வாக ஓடிவந்த சில பெண் ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் தண்ணீர்க் பாட்டில்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக, மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைக்கும் மேடையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்புக்கான மிக முக்கியமான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. “நான் ஒருபோதும் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்; போதைப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வர எனது பங்களிப்பை வழங்குவேன்; தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை வேரறுக்க அரசுடன் என்றும் துணை நிற்பேன்” என்று முதலமைச்சர் வாசிக்க, அங்கிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், இளைஞர்களும் ஒருமித்த குரலில் உறுதிமொழி எடுத்தனர். இதுவே இன்றைய அதிகாலையில் முதல்வர் தமிழக மக்களுக்குத் தந்த மிக முக்கியமான ஸ்பெஷல் மெசேஜ் ஆகும்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய காலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிப்பதே தங்களது முதன்மை இலக்கு என்று விஜய் தொடர்ந்து கூறி வந்தார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனே, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (Anti-Narcotics Wing) அதிகாரிகளை நியமித்துக் கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, இன்று நேரடியாகத் தானே களமிறங்கி மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருப்பது, ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவதில் தவெக அரசு காட்டி வரும் தீவிரத்தைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.