Posted in

பெய்ஜிங்கின் மிக உயரமான கட்டிடத்தில் மோதிய சிறிய விமானம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் மைய வணிகப் பகுதியில் அமைந்துள்ள, அந்நகரிலேயே மிக உயரமான ‘சிடிக் டவர்’ (CITIC Tower – China Zun) என்ற 108 அடுக்குமாடி வானளாவிய கட்டிடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், கார் அளவிலான ஒரு சிறிய விமானம் கட்டிடத்தின் மேல் தளத்தின் மீது பலமாக மோதியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் விபத்தைத் தொடர்ந்து, 1,732 அடி உயரமுள்ள அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடனடியாக அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு டஜன் கணக்கான போலீஸ் வாகனங்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. விபத்து நடந்த சிடிக் டவர் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தையும் காவல்துறையினர் முழுமையாக மூடி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும், பொதுமக்களோ அல்லது ஊடகவியலாளர்களோ சம்பவ இடத்தை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க சீனப் பாதுகாப்புப் படையினர் கடுமையான தடை விதித்ததோடு, ஏற்கனவே எடுக்கப்பட்ட பதிவுகளையும் மொபைல் போன்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கச் செய்தனர்.

சமூக ஊடகங்களில் கசிந்த முதற்கட்ட தகவல்களின்படி, விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘சன்வார்டு எஸ்ஏ 60எல் அரோரா’ (Sunward SA 60L Aurora) என்ற லகுரக விளையாட்டு விமானம் (Light sport aircraft) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விமானம் ஒரு உள்ளூர் பொது விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், இது திட்டமிடப்பட்ட விமானப் பாதையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்று கட்டிடத்தின் மீது மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்தின் போது விமானத்தில் விமானி மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது.

சீனாவின் மிகக் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பெய்ஜிங் நகரில், அண்மையில் தான் ட்ரோன்கள் மற்றும் சிறிய பறக்கும் சாதனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில், அரசுக்குச் சொந்தமான சிடிக் குழுமத்தின் தலைமையகமாகச் செயல்படும் முக்கியக் கட்டிடத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த அசம்பாவிதம் குறித்து சீன அரசு மற்றும் பெய்ஜிங் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விரிவான அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.