Posted in

வைகோவை வீழ்த்திய எம்.பி. முதல் மாநில காங்கிரஸ் தலைவர் வரை… யார் மாணிக்கம் தாகூர்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. மாணிக்கம் தாகூர் டெல்லி மேலிடத்தால் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனது நீண்டகாலத் தோழனான திமுகவை உதறிவிட்டு, தற்போதைய ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள இந்தச் சூழலில், புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூரின் பின்னணி மற்றும் அவரது அரசியல் பயணம் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கையில் கடந்த 1975 ஆம் ஆண்டு பிறந்த மாணிக்கம் தாகூர் (51), தனது கல்லூரிப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ (NSUI) மூலம் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். 1994 ஆம் ஆண்டு மாவட்ட பொதுச்செயலாளராகத் தொடங்கி, பின்னர் மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய என்.எஸ்.யூ.ஐ பொதுச்செயலாளர், இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எனப் படிப்படியாகத் தனது உழைப்பால் உயர்ந்தவர். டெல்லி மேலிடத்துடனும், குறிப்பாக ராகுல் காந்தியுடனும் மிக நெருக்கமான நன்மதிப்பைப் பெற்றதே இவருக்கு இந்த மாநிலத் தலைமைப் பதவி கிடைப்பதற்குக் காரணியாக அமைந்துள்ளது.

தேர்தல் களத்தைப் பொறுத்தவரை மாணிக்கம் தாகூர் ஒரு தேர்ந்த ராஜதந்திரி ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் முதன்முதலாகப் போட்டியிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையே வீழ்த்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சாதனை படைத்தார். 2014 இல் தோல்வியைத் தழுவினாலும், பின்னர் 2019 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக அமோக வெற்றி பெற்று, தற்போது 3 முறை எம்பியாகவும், மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் (Whip) கம்பீரமாகச் செயல்பட்டு வருகிறார்.

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற கோரிக்கையைத் தீவிரமாக முன்னெடுத்து, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற மிக முக்கியப் பங்காற்றியவர் மாணிக்கம் தாகூர். நாளை (ஜூன் 29) சென்னை சத்தியமூர்த்தி பவனில் முறைப்படி தலைவராகப் பதவியேற்கவுள்ள இவருக்கு முன்னால், தவெக-காங்கிரஸ் கூட்டணியை அடிமட்டத் தொண்டர்களிடம் கொண்டு சேர்த்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டிய மிகப்பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது.