Posted in

இஸ்லாமியர் இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடிப்பு… முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?

தமிழகத்தில் நிலவி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு கொள்கையைப் பாதுகாப்பது தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அண்மையில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, இஸ்லாமிய சமூகத்திற்கான இடஒதுக்கீடு விவகாரம் மாநில அரசியல் களத்தில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர்களுக்கான (BCM) 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இஸ்லாமிய அமைப்புகளால் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், தற்போதைய சட்ட மற்றும் அரசியல் சூழ்நிலைகள் இஸ்லாமிய மக்களிடையே ஒருவித பதற்றத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த ஒரு முக்கியத் தீர்ப்பு இஸ்லாமிய சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும், அவர்கள் ‘பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்’ (BCM) என்ற பிரிவின் கீழ் இடஒதுக்கீடு சலுகைகளைத் தொடர்ந்து பெறலாம் என முந்தைய திமுக அரசு கடந்த 2024 ஆம் ஆண்டு பிறப்பித்திருந்த அரசாணையை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்துள்ளது. “மதம் மாறிய ஒருவரைப் பிறப்பால் மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவுக்குள் கொண்டு வர இயலாது” என்ற நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பே இஸ்லாமியர்களின் தற்போதைய அதிருப்திக்கு முதன்மைக் காரணமாகும்.

இதற்கிடையே, தவெக தலைமையிலான கூட்டணியில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் (IUML), இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அது அரசின் தீவிரப் பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் இந்தத் தன்னிச்சையான அறிவிப்புக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இதனால் பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் சலுகைகள் பாதிக்கப்படும் என்றும் கூறி, முதலமைச்சர் விஜய் இதில் தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாக விளக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒருபுறம் நீதிமன்றத் தீர்ப்பால் ஏற்பட்டுள்ள சலுகை இழப்பு, மறுபுறம் இடஒதுக்கீட்டை உயர்த்தக் கோரும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம், அதே நேரத்தில் அதற்கு எதிராகப் பாயும் எதிர்க்கட்சிகளின் கண்டனம் எனப் பலமுனைச் சிக்கல்களுக்கு நடுவே முதலமைச்சர் விஜய் சிக்கியுள்ளார். ஒட்டுமொத்த சமூக நீதியையும், மாநிலத்தின் 69 சதவீத பாதுகாப்பையும் பாதிக்காத வகையில் தவெக அரசு இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான சட்டப்பூர்வ முடிவை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.