Posted in

திடீரென முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எடுத்த முடிவு – பரபரப்பு

ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அபகரித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சம்பவம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. தனது குடும்பத்திற்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தைப் போலி பத்திரங்கள் தயாரித்து அபகரித்துக் கொண்டதாகவும், இது குறித்துத் தட்டிக் கேட்டபோது ஆள் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பிரகாஷ் குற்றம் சாட்டியிருந்தார். கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரையும் சேர்த்து, சிபிசிஐடி போலீசார் கொலை மிரட்டல், கடத்தல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நில மோசடி வழக்கில் காணாமல் போன ஆவணங்களுக்கான சான்றிதழை தவறாக வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் பிரிதிவிராஜும் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். போலி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் மூலம் பத்திரப் பதிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த ஆஜர்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவ்வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர், நீதிமன்றத்தில் ஆஜராகித் தனது தரப்பு விளக்கங்களை அளித்துள்ளார். கரூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் மற்றும் காவல் ஆய்வாளர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது அப்பகுதியில் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply