சென்னை மாநகராட்சியால் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகங்களின் வருவாய் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சரிவைக் கண்டது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குச் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச அளவில் நிலவிய போர்ப் பதற்றச் சூழல் காரணமாக ஏற்பட்ட சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடே இந்தத் தற்காலிகச் சரிவுக்கு முக்கயக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேயர் பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களுக்குப் புதிய இயந்திரங்கள், பாத்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், ரூ.20 கோடி நிதியில் 290 உணவகக் கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பயனாகச் சாப்பிடும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் விற்பனை வருவாய் ரூ.1.13 கோடியை எட்டியதுடன், ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டு வந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், உலகளாவிய போர்ச்சூழலால் நாடு முழுவதும் உருவான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, அம்மா உணவகங்களுக்குத் தேவையான சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உணவுகள் தயாரிக்கும் அளவு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டதால், ஏப்ரல் மாதத்தில் மட்டும் தினசரி பயனாளிகளின் எண்ணிக்கை சரிந்து வருவாயில் தற்காலிக வீழ்ச்சி ஏற்பட்டது என விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் எடுத்த உடனடி அதிரடி நடவடிக்கைகளால் மே மற்றும் ஜூன் மாதங்களில் எரிவாயு விநியோகம் சீராக்கப்பட்டு, அம்மா உணவகங்களின் தினசரி பயனாளிகள் எண்ணிக்கை 1.04 லட்சமாக மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனை வருவாய் மீண்டும் மாதம் ரூ.1.35 கோடியாக அதிகரித்து பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ள மேயர், அம்மா உணவகங்களை முடக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.