கத்தார் அரச குடும்பத்தால் அமெரிக்காவிற்குப் பரிசாக வழங்கப்பட்டு, சமீபத்தில் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ‘ஏர் போர்ஸ் ஒன்’ (Air Force One) விமானமாக மாற்றப்பட்ட சொகுசு போயிங் 747-8 விமானம், தற்காலிகமாகப் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுப் பாதுகாப்பு மேம்பாடுகளுக்காக அனுப்பப்படவுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபரின் பாதுகாப்புக்குத் தேவையான அதிநவீன வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தடுப்பு அம்சங்கள் அந்த விமானத்தில் முழுமையாக இல்லை என்ற கடுமையான சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த சொகுசு விமானம், அமெரிக்க அதிபரின் பயன்பாட்டிற்காக அண்மையில்தான் நவீன சிவப்பு, வெள்ளை மற்றும் அடர் நீல நிறத்தில் பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டுச் சேவையில் இணைக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டிற்கு இந்த விமானத்தில் சென்ற டிரம்ப், திரும்பும் போது பாதுகாப்பு காரணங்களுக்காகப் பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்குத் திடீரென மாறினார். கத்தார் விமானத்தில் எதிரி நாட்டின் ஏவுகணைகளை முறியடிக்கும் ‘ஆன்டி-மிசைல்’ அமைப்புகள் மற்றும் மின்காந்தத் தாக்குதல்களைத் தாங்கும் தொழில்நுட்பங்கள் போதுமானதாக இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான ‘சீக்ரெட் சர்வீஸ்’ எச்சரித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த ரகசியத் தகவல்கள் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகவல் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து வெள்ளை மாளிகை மற்றும் எஃப்.பி.ஐ (FBI) தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, தொடர்புடைய நிருபர்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. அதேவேளையில், ஒரு வெளிநாட்டு அரசு வழங்கிய விமானத்தை அதிபர் பயன்படுத்தியதில் உள்ள அரசியலமைப்பு சட்டச் சிக்கல்கள் குறித்தும் அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டொனால்ட் டிரம்ப், “இந்த விமானம் தற்போது பாதுகாப்பானதுதான் என்றாலும், அதன் பாதுகாப்பு அம்சங்களை முழுமையான அளவிற்கு (Maxed Out) உயர்த்த வேண்டியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில வாரங்களில் இந்த விமானம் நவீனப் பாதுகாப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டு சுமார் ஒரு மாதம் வரை முடக்கப்படும் என்றும், அதுவரை டிரம்ப் தனது பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தையே தொடர்ந்து பயன்படுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.