Posted in

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்திற்குப் பணி நியமனம் செல்லாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்குத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு கருணை அடிப்படையில் வழங்கிய அரசுப் பணி நியமன அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமையிலான சட்டக் குழுவினர் மற்றும் பிற மனுதாரர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்த நிலையில், அதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், “அரசு வேலை என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைகளின் (Articles 14 & 16) அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்” எனச் சுட்டிக்காட்டியது. மேலும், பணி நியமனங்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பணியில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது, விதிகளை மீறி அரசாணை 54-ன் கீழ் வழங்கப்பட்ட இத்தகைய சிறப்புப் பணி ஆணைகள் சட்டப்படி செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.

விசாரணையின் போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, “ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, லீலாவதி படுகொலை மற்றும் எக்ஸ்-சர்வீஸ்மேன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது போலத் தான் இதுவும் சிறப்பு நேர்வாக வழங்கப்பட்டது” என வாதிட்டார். ஆனால் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், “அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இறப்பதே கருணை அடிப்படையிலான பணிக்கு உரியது; அரசு பேருந்து மோதி உயிரிழப்போருக்கெல்லாம் இதேபோல் வேலை கொடுக்க முடியுமா? சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள ஒரு கூட்ட நெரிசல் சம்பவத்தை இதனுடன் ஒப்பீட முடியாது” என முன்வைத்த வாதங்களை ஏற்ற நீதிமன்றம், தவெக அரசின் அரசாணையைத் தள்ளுபடி செய்தது.

டிஎன்பிஎஸ்சி தரப்பில் இந்த வழக்கில் தங்களுக்கும் இதற்கும் நேரடித் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தவெக அரசு வழங்கிய பணி ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, நேர்மையான முறையில் போட்டித்தேர்வுக்குப் படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள வாரிசுகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக மனுதாரர்கள் தரப்பில் வரவேற்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு தவெக அரசிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.