Posted in

காஸ்பியன் கடலில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: உக்ரைன் – ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் அவசர பேச்சுவார்த்தை!

காஸ்பியன் கடல் பகுதியில் ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்று உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, அதில் பயணித்த ஈரானிய மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த விவகாரத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் தவிர்க்க இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், உக்ரைன் மற்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முன்னதாக, ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவப் பொருட்களைக் கொண்டு செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து காஸ்பியன் கடலில் உக்ரைனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார். ஆனால், தங்களின் வணிகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய இந்தத் தாக்குதல் ஐநா சாசனத்திற்கு எதிரானது என்றும், இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக எச்சரித்திருந்தது.

இந்த மோதல் புதிய போராக உருவெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு, உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அப்ராச்சி இடையே நேரடி உரையாடல் நடைபெற்றது. அப்போது பேசுகையில், ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து தங்கள் நாட்டைப் பாதுகாப்பதே உக்ரைனின் ஒரே நோக்கம் என்றும், ஈரானிய வணிகக் கப்பலையோ அல்லது பொதுமக்களையோ தாக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும் உக்ரைன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

உக்ரைனின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அப்ராச்சி, “ஈரானும் இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை; ஆனால் எங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் குடிமக்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்தார். இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை மூலம் சூழலைச் சீராக்க முன்வந்துள்ளதால், காஸ்பியன் கடல் பிராந்தியத்தில் உருவான பெரும் போர் அச்சுறுத்தல் தற்காலிகமாகத் தணிந்துள்ளது.