Posted in

மாறும் அரசியல் களம்: தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு.. செங்கல்பட்டில் பரபரப்பு

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு வீரானம் மற்றும் குண்ணம் கிராமங்களில் பொதுமக்கள் திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து 32 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், தவெக வேட்பாளர் பிரச்சாரத்திற்குச் சென்ற இடத்தில் இந்த எதிர்ப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், பின்னர் அக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தற்போது மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராகக் களம் காண்கிறார். இந்நிலையில் இன்று காலை வீரானம் பகுதியில் அவர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அப்பகுதி மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கிராமத்திற்குள் வரக்கூடாது என முழக்கங்களை எழுப்பிப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தினார்கள்.

கூலித் தொழிலாளர்களும் முதியோர்களும் அதிகம் வசிக்கக்கூடிய அந்தப் பகுதியில், கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அடிப்படை வசதிகளைச் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன்வைத்தனர். குறிப்பாகக் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும், முதியோர் உதவித்தொகை மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உரிய வாய்ப்புகள் மற்றும் உதவிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று, அப்பகுதியில் உள்ள கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க மரகதம் குமரவேல் சென்றபோதும் மற்றொரு எதிர்ப்பு எழுந்தது. கட்சி அடையாளத்துடன் கூடிய துண்டை அணிந்து கொண்டு கோயில் குழுவினருடன் உள்ளே செல்ல முயன்றபோது, அங்குள்ள பூசாரிகள் மற்றும் பொதுமக்கள் “கட்சி அடையாளங்களைத் தவிர்த்துவிட்டு தனிநபராக வாருங்கள்” எனக் கூறித் தடுத்து நிறுத்தியதால் அங்கேயும் பரபரப்பான சூழல் நிலவியது. மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உறுதியாகியுள்ள நிலையில், தவெக வேட்பாளருக்குச் சொந்தத் தொகுதியிலேயே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சம்பவங்கள் தேர்தல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.