உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) ஏற்பாடுகளில் கோயில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாக அறங்காவலர் குழுத் தலைவரும், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அறங்காவலர் குழுவைப் புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது பக்தர்களிடையேயும் ஆன்மீக வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இக்குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த ருக்மணி பழனிவேல்ராஜன், விழாவுக்கான சிறப்பு அனுமதிச் சீட்டுகள் (Passes) வழங்குவது, உபயதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்புவது போன்ற முக்கியக் காரியங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை எனச் சாடினார். நாள்தோறும் வெவ்வேறு எண்ணிக்கையில் அனுமதிச் சீட்டுகள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாவதாகவும், அறங்காவலர் குழு தயாரித்து வழங்கிய முக்கியப் பிரமுகர்களின் பட்டியலை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த விழாவில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்துத் தெளிவான திட்டமிடல் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். “பி.டி. ராஜன் காலம் தொட்டே எங்கள் குடும்பம் ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கலந்தது இல்லை. திருக்கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட்டு வருகிறோம். ஆனால் கோயில் நிர்வாகம் அறங்காவலர்களை ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பது ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகளை உருவாக்கியுள்ளது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
ஆளும் திமுக அரசின் முக்கிய அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாரும், கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவருமான ருக்மணி பழனிவேல்ராஜனே இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் இணை ஆணையரின் செயல்பாடுகள் குறித்துப் பகிரங்கமாகப் புகார் எழுப்பியிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு குளறுபடிகளைச் சரிசெய்து, கும்பாபிஷேக விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.