Posted in

இந்திய எல்லை அருகே 5-ஆம் தலைமுறை ‘ஜே-20’ போர் விமானங்களைக் குவித்து சீனா அதிரடி!

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து, சீன ராணுவம் தனது மிக அதிநவீன 5-ஆம் தலைமுறை ‘ஜே-20 மைட்டி டிராகன்’ (J-20 Mighty Dragon) ரக ஸ்டெல்த் போர் விமானங்களை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) மிக அருகில் நிறுத்தியுள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் பெறப்பட்ட இந்த ஆதாரங்கள், எல்லையில் வான்வழிப் பாதுகாப்பில் சீனா புதிய மாற்றங்களை முன்னெடுத்து வருவதை வெளிப்படுத்தியுள்ளன.

வணிக ரீதியிலான சாட்டிலைட் நிறுவனமான ‘வான்டோர்’ (Vantor) எடுத்துள்ள சமீபத்திய புகைப்படங்களின்படி, சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோட்டான் (Hotan) விமானப்படை தளத்தில் 7 முதல் 8 ஜே-20 ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் தளம் கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள இந்தியாவின் தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) ராணுவத் தளத்திலிருந்து வெறும் 245 கிலோமீட்டர் தொலைவிலும், லே பகுதியிலிருந்து 389 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமன்றி, திபெத்தின் லாசா பகுதியில் உள்ள தாம்க்சுங் (Damxung) விமானப்படை தளத்தில் மேலும் 4 ஜே-20 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியிலிருந்து வடமேற்கே சுமார் 344 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தில் ஜே-20 விமானங்கள் குவிக்கப்பட்டுள்ளது, கிழக்கு எல்லையிலும் சீனா தனது வான்வழிப் பலத்தை தீவிரப்படுத்தி வருவதையே காட்டுகிறது. எல்லையை ஒட்டிய சீனத் தளங்களில் இதுவரை இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் ஸ்டெல்த் விமானங்கள் நிறுத்தப்பட்டது இல்லை என ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் இந்த வான்வழி நகர்வுகளை இந்திய விமானப்படை (IAF) மிகவும் நுட்பமாகக் கண்காணித்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் ரஃபேல் (Dassault Rafale), சுகோய் (Su-30MKI) போன்ற நவீன போர் விமானங்களுடன், அதிநவீன ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளையும் இந்தியா தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலத்தில் அமைதி நிலவினாலும், வான்வெளியில் சீனாவின் இந்தத் தொடர் அச்சுறுத்தல்கள் இந்திய எல்லைப் பாதுகாப்பில் பெரும் கவனத்தைக் கோரியுள்ளன.