மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ் ஸ்பென்சர் (Earl Charles Spencer) எழுதியுள்ள புதிய நினைவுக் குறிப்புப் புத்தகத்தில், “டயானா இறந்த சில நாட்களிலேயே, ‘கவலைப்படாதீர்கள், விரைவில் அவரை நாம் மறந்து விடுவோம்’ என்று தற்போதைய மன்னர் சார்லஸ் என்னிடம் கூறினார்” எனக் குற்றம் சாட்டியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி குற்றச்சாட்டுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை வழக்கத்திற்கு மாறாகத் தனது மௌனத்தைக் கலைத்துப் பதில் அளித்துள்ளது.
சார்லஸ் ஸ்பென்சர் எழுதியுள்ள ‘ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்’ (Swan Song: Diana, My Sister) என்ற புதிய நூல் செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நூலின் முக்கியப் பகுதிகள் லண்டன் ஊடகங்களில் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 1997-ல் டயானா மறைந்த போது, அவரது இளம் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி ஆகிய இருவரையும் அன்னையின் இறுதி ஊர்வலத்தில் பேழைக்கு பின்னால் நடக்க வைப்பது தொடர்பாகத் தமக்கும் அப்போதைய இளவரசர் சார்லஸுக்கும் இடையே தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக ஸ்பென்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களை அத்தகைய துயரமான நிகழ்வில் பொதுவெளியில் நடக்க வைப்பதற்குத் தான் கடுமையாக எதிர்த்த போது, கோபமடைந்த சார்லஸ் “கவலைப்படாதீர்கள், அவரை விரைவில் நாம் மறந்து விடுவோம்” என்று டயானா மீதான தனது கோபத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியதாக ஸ்பென்சர் எழுதியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தான் உடனே இணைப்பைத் துண்டித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ள இந்த விவகாரம் பிரிட்டன் ராஜ குடும்ப வட்டாரங்களில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.
பொதுவாக அரச குடும்ப உறுப்பினர்களின் சுயசரிதை நூல்கள் குறித்துப் கருத்துத் தெரிவிக்காத பக்கிங்ஹாம் அரண்மனை, இம்முறை மன்னர் சார்லஸின் சார்பில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வழக்கமாகப் புத்தகங்கள் குறித்து கருத்து கூறுவதில்லை என்றாலும், உடன்பிறந்தவரை இழந்த துயரமும் வலியும் ஒருவரது நினைவாற்றலையும், சிந்தனையையும், மதிப்பீடுகளையும் பல ஆண்டுகள் கழித்தும் கூட எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதை மன்னர் நன்கு உணர்ந்துள்ளார்” எனத் தெரிவித்து ஸ்பென்சரின் நினைவுக் குறிப்பைப் மறைமுகமாக மறுத்துள்ளது.