Posted in

A1 குற்றவாளியாக செந்தில் பாலாஜி! டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மீது FIR பதிவு!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) நடைபெற்றதாகக் கூறப்படும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எஸ். விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப் பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள முதல்தகவல் அறிக்கையில் (FIR) முதல் குற்றவாளியாக (A1) செந்தில் பாலாஜியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ். விசாகன் இரண்டாவது குற்றவாளியாகச் (A2) சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, டாஸ்மாக் முன்னாள் பொது மேலாளர் டி. ராமதுரை முருகன், முன்னாள் மூத்த மண்டல மேலாளர் ஆர். பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர், நெருங்கிய கூட்டாளி ரதேஷ் ராஜ் மற்றும் எஸ். கார்த்திக் ஆகியோரின் பெயர்களும் எப்.ஐ.ஆரில் அதிகாரப்பூர்வமாகப் இடம்பெற்றுள்ளன. மேலும், சில முன்னணி மதுபான உற்பத்தி ஆலைகள் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் மீதும் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மதுபானக் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், போக்குவரத்து டெண்டர்கள் மற்றும் மதுபான பாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் கையாடலில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கோவை உட்பட தமிழகத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. ஏற்கெனவே அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் பார்வையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி மீது, தற்போது மாநில லஞ்ச ஒழிப்புத் துறையே எப்.ஐ.ஆர் பதிவு செய்து ஏ1 குற்றவாளியாகச் சேர்த்துள்ளது ஆளும் தரப்பிற்கும் கொங்கு மண்டல அரசியலுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.