Posted in

முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணத்திற்குத் தடை போட்ட டி.கே.சிவகுமார்: என்ன பின்னணி?

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பெங்களூரு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், “தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” என கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அதிரடியாகக் கேட்டுக்கொண்டுள்ளார். பெங்களூரு விதான் சௌதாவில் நடைபெற்ற உயர்நில ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அம்மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழலைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்றும், மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கர்நாடகாவில் கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணை முற்றுகை மற்றும் தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களால் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், கன்னட அமைப்புகளின் தலைவரான வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர், தமிழ்நாட்டு முதலமைச்சரின் பெங்களூரு வருகைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தனர். இத்தகைய பரபரப்பான அரசியல் மற்றும் சமூகச் சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு வருகை தந்தால், அது போராட்டக்காரர்களை மேலும் தூண்டிவிட்டு நிலைமையைச் சிக்கலாக்கும் என்பதால், நிலைமை சீரடையும் வரை இந்தச் சந்திப்பைத் தள்ளிவைப்பதே நல்லது என டி.கே. சிவகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, காவிரி விவகாரத்தில் கர்நாடகா சென்று இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தற்போது கர்நாடக தரப்பில் இருந்தே இத்தகைய வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் தெரிகிறது. இந்தத் திடீர் திருப்பம் காவிரி நீர் குறித்த அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.