Posted in

தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் – செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி

டாஸ்மாக் பார் உரிமங்கள், மதுபானக் கொள்முதல் மற்றும் போக்குவரத்து டெண்டர்களில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) பதிவு செய்துள்ள புதிய ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால நிவாரணமாகக் கைதுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வழக்கின் விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கு 2021 முதல் 2025 வரையிலான காலகட்டம் தொடர்பானது. ஏற்கனவே அமலாக்கத் துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை அடிப்படையாக வைத்தே தற்போதைய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி தனது பாஸ்போர்ட்டையும் ஏற்கனவே ஒப்படைத்துள்ளார்” என வாதிட்டார். இதையேற்ற நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது அமைச்சராக இல்லை; மேலும் வழக்கு முழுவதுமாக ஆவணங்கள் அடிப்படையிலானது என்பதால் அவருக்குக் கைது நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “இது தீவிரமான ஊழல் குற்றம்; அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது” என வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி அமர்வு, “ஒரு அரசு இது போன்ற விஷயங்களுக்கு மிதமிஞ்சிய அச்சப்படக் கூடாது (Don’t be oversensitive). அரசியல் விவகாரங்களில் நிதானம் தேவை” எனக் குறிப்பிட்டதுடன், “செந்தில் பாலாஜி தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும், அதில் எந்த மாற்றமும் இல்லை” என்ற காரசாரமான கருத்தையும் தெரிவித்தது.

இறுதியில், மறுஉத்தரவு வரும் வரை செந்தில் பாலாஜியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், அவர் விசாரணை அதிகாரியின் முன்பாக ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், விசாரணையில் தலையிடக் கூடாது என்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த உத்தரவு செந்தில் பாலாஜிக்குத் தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.