Posted in

இனி பஸ்சில் உரத்த சத்தம் போட்டால் ஆபத்து! போக்குவரத்துத் துறை புதிய உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கைபேசியின் ஸ்பீக்கரை ஆன் செய்து உரத்த சத்தத்தில் பாடல்கள் கேட்பது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் வீடியோக்கள் பார்ப்பது மற்றும் உரத்த குரலில் பேசுவது போன்ற செயல்களுக்குத் தடை விதித்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பேருந்துப் பயணத்தை அமைதியானதாகவும், சக பயணிகளுக்கு இடையூறில்லாததாகவும் மாற்றுவதற்குக் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC), அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) மற்றும் அனைத்து மண்டலப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் போக்குவரத்துத் துறைச் செயலாளர் எல். நிர்மல் ராஜ் ஐ.ஏ.எஸ் புதிய பயண நெறிமுறைகளை அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையாக அனுப்பி வைத்துள்ளார்.

புதிய விதிமுறைகளின்படி, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் எவரும் தங்களது கைபேசி ஸ்பீக்கர் மூலம் வீடியோக்களையோ, திரைப்படங்களையோ அல்லது பாடல்களையோ ஒலிக்க விடக் கூடாது. கைபேசியில் ஆடியோ அல்லது வீடியோவைப் பயன்படுத்த விரும்பும் பயணிகள் கட்டாயமாக இயர்போன் (Earphone) அல்லது ஹெட்போன்களை (Headphone) மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதிலும் பக்கத்தில் இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்காதவாறு மிதமான அளவிலேயே கேட்க வேண்டும். மேலும், பயணம் முழுவதிலும் மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும் வகையில் மொபைல் போனில் கத்திப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு மட்டுமின்றி, பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பேருந்துகளில் உள்ள ஸ்பீக்கர் சிஸ்டம் மூலம் ஓட்டுநர்கள் அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிக்க விடக் கூடாது என மோட்டார் வாகன விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் குறித்துப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து அரசுப் பேருந்துகளின் முன்பக்க நுழைவுவாயில், நடுப்பகுதி மற்றும் பின்பக்க கதவுகளின் அருகில் “நோ ஸ்பீக்கர் மோட் – இயர்போன்களைப் பயன்படுத்துங்கள்”, “அமைதியான பயணம் – பாதுகாப்பான பயணம்” போன்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அலுவலகப் பணி முடிந்து தளர்ச்சியுடன் திரும்புவோர், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்குப் பேருந்துகளில் நிலவும் அதிகபட்ச சத்தம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிச் சக பயணிகளுக்குத் தொல்லை தரும் நபர்கள் மீது தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 1989-ன் கீழ் நடத்துநர்கள் மற்றும் ஆய்வுக் குழுவினர் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், இப்புதிய நடைமுறைக்குத் தினசரிப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.