ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பல தசாப்த கால இரும்புப்பிடியிலான ஆட்சியை, அவரது மிக நெருங்கிய உள்கட்சி வட்டாரத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் பெரும் தொழிலதிபர்களும் (Oligarchs) உள்ளிருந்தபடியே தகர்க்கத் தொடங்கியுள்ளதாகச் சர்வதேச உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் மேற்கத்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் போரின் தொடர்ச்சி, பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் அரசால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது ஆகியவற்றால் அதிருப்தியடைந்துள்ள கிரெம்ளின் உயரடுக்குகள், புதினுக்கு எதிராக மறைமுக நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நீண்டகாலமாகப் புதினுக்கு விசுவாசமாக இருந்த தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களான நிருவாகிகள் (Technocrats) தற்போது அதிகார மையத்தின் முடிவுகளால் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றனர். உக்ரைன் மீதான போர் தொடர்வதால் நாட்டின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதும், அரசுசாரா தனியார் நிறுவனங்களைக் கிரெம்ளின் தன் வசப்படுத்தி வருவதும் ரஷ்ய வணிகக் கூட்டமைப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், புதினின் தீவிரப்போக்கு தங்களது எதிர்காலத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் முற்றிலுமாகப் பாதிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.
மேலும், ரஷ்யப் உளவு அமைப்பான எஃப்.எஸ்.பி (FSB) மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள உள்நாட்டு அதிகாரப் போட்டி, கிரெம்ளின் மாளிகைக்குள் கட்டுப்படுத்த முடியாத பிளவை உருவாக்கியுள்ளது. நாட்டின் முக்கிய முடிவுகளில் தங்களுக்கு முன்னுரிமை மறுக்கப்படுவதாக உணரும் மூத்த அதிகாரிகள், ரகசியத் தகவல்களை வெளியே கசியவிடுவதாகவும், புதினின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான வியூகங்களை அமைப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வெளிப்படைத் தன்மையற்ற இந்த உள்நாட்டு மோதல்கள் மாஸ்கோ அதிகார மையத்தில் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பையும் அச்சத்தையும் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவெளியில் வீரம் பேசினாலும், கிரெம்ளின் மாளிகையின் உள்ளேயே தனக்கு எதிராக உருவாகிவரும் இந்த ‘உள்நாட்டு எதிரிகள்’ புதினின் பிடியை மெல்லத் தளரச் செய்து வருவதாகவும், இது ரஷ்ய நிருவாக அமைப்பில் பெரும் அரசியல் மாற்றத்திற்கான முன்னோடியாக இருக்கலாம் என்றும் உலக அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.