அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ‘லிங்கன் மெமோரியல் ரிஃப்ளெக்டிங் பூல்’ (Lincoln Memorial Reflecting Pool) குளத்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக முன்னாள் ஒலிம்பிக் வீரர் டேவிட் ஹெர்ன் (David Hearn) மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கையும் கைது நடவடிக்கையையும் அமெரிக்க நீதித் துறை (DOJ) அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளது. குளத்தில் ஏற்பட்ட சேதத்திற்குக் சதிச்செயலோ அல்லது பொதுச் சொத்துச் சேதமோ (Vandalism) காரணம் அல்ல; மாறாக ஒப்பந்ததாரரின் குளறுபடியான கட்டுமானப் பணிகளே (Botched Installation) காரணம் என நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமெரிக்கச் சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, 600 மீட்டர் நீளமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் குளத்தின் அடிப்பகுதியை ‘அமெரிக்கக் கொடி நீல நிறத்தில்’ (American Flag Blue) மாற்றும் $14.7 மில்லியன் மதிப்பிலான புதுப்பித்தல் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்தார். எனினும், பணிகள் முடிவடைந்த சில நாட்களிலேயே நீல நிறப் பூச்சுகள் கழன்று மிதக்கத் தொடங்கியதால், சதியாளர்களே இதற்குப் பின்னணியில் இருப்பதாகத் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். இந்த சூழலில், சைக்கிள் பயணத்தின் போது கழன்றிருந்த பூச்சைத் தொட்டுப் பார்த்த முன்னாள் ஒலிம்பிக் படகோட்டியான 67 வயது டேவிட் ஹெர்ன், தேசியக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த கூடுதல் ஆவணங்கள் மற்றும் பார்வை ஆய்வுகள் மூலம், அவசர அவசரமாகப் பணிகளை முடிப்பதற்காகக் ஒப்பந்ததாரர் மேற்கொண்ட தவறான தொழில்நுட்ப முறைகளாலேயே பூச்சுகள் உரிந்து தொங்கியது உறுதியானது. மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத குளத்தின் நடுப்பகுதியிலும் பூச்சுகள் உ உரிந்திருந்ததால், இது பொதுச் சொத்துச் சேதம் அல்ல என டி.சி. நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜீனைன் பிரோ (Jeanine Pirro) 20 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்து வழக்கை ரத்து செய்யக் கோரினார். “எவ்விதத் தவறும் செய்யாத தேசப்பற்றுள்ள ஒருவரைக் கைது செய்து பழிவாங்கியதற்காக அரசு ஹெர்னிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என அவரது வழக்கறிஞர்கள் சாடியுள்ளனர்.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், “ஒப்பந்ததாரரிடம் சிறு தவறுகள் இருந்திருக்கலாம், ஆனால் பெரும் சேதத்திற்குச் சதியாளர்களே காரணம்; வழக்கறிஞர் பிரோவின் இந்த முடிவை நான் 100% மறுக்கிறேன்” என அதிருப்தி தெரிவித்துள்ளார். தவறான புதுப்பித்தல் பணிகளால் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நீர்நிலையின் தண்ணீர் தற்சமயம் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வெறிச்சோடி நிலையில் வைக்கப்பட்டுள்ளதும், அப்பாவி ஒலிம்பிக் வீரர் மீது தவறாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் அமெரிக்க ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.