Posted in

அமெரிக்கக் குடிநீர் நிலையத்தில் நச்சுப் பாய்ச்ச திட்டம்? : ஈரானிய ஹேக்கர்கள் மீது பலத்த சந்தேகம்!

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாட்டு மையங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரம்மாண்ட இணையத் தாக்குதல் (Coordinated Cyberattack) நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரானைச் சேர்ந்த இணையக் குற்றவாளிகள் (Iranian-linked Hackers) இருக்கலாம் என அமெரிக்க உளவு அமைப்பான எஃப்பிஐ (FBI) மற்றும் முதன்மைச் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தீவிரமாகச் சந்தேகிக்கின்றனர்.

மினசோட்டா மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறை (MNIT) வெளியிட்டுள்ள தகவலின்படி, பிளைமவுத், சவுத் செயிண்ட் பால், பிரஹாம் உள்ளிட்ட பல நகரங்களின் குடிநீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கித் தொழில்நுட்பக் கருவிகள் (Automated Control Systems) இந்தத் தாக்குதலால் திடீரென முடங்கின. இதன் காரணமாக, அமைப்புகளை மீண்டும் பாதுகாப்பாக இயக்கக் கைமுறை செயல்பாடுகளுக்குச் (Manual Workarounds) செல்ல வேண்டிய கட்டாயம் நகராட்சி ஊழியர்களுக்கு ஏற்பட்டது. இருப்பினும், குடிநீரின் தரம் பாதிக்கப்படவில்லை என்றும், மக்களின் பயன்பாட்டிற்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பொதுவாக இது போன்ற முக்கியமான நாட்டின் உள்கட்டமைப்புகளைத் தாக்கும் ஹேக்கிங் குழுக்கள், தங்களது வீரத்தை நிலைநாட்ட உடனடியாகச் சமூக வலைதளங்களில் பொறுப்பேற்பது வழக்கம். ஆனால், மினசோட்டாவில் 36 நகராட்சிகளைக் முடக்கிப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பிறகும், ஈரான் அல்லது அந்நாட்டு அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர் குழுக்கள் இதற்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக உரிமை கோராதது உலகளாவிய சைபர் பாதுகாப்பு வல்லுநர்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் மற்றும் போர்ப் பதற்றங்களின் பின்னணியில், இதுபோன்ற அத்தியாவசிய பொதுச் சேவைகளைக் குறிவைத்து நடத்தப்படும் ‘டிஜிட்டல் போர்முறை’ (Digital Warfare) அமெரிக்க நிருவாகத்திற்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் இணையக் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும், இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு சாதனங்களை உடனடியாகத் தனிமைப்படுத்துமாறும் அமெரிக்கச் சைபர் பாதுகாப்பு முகமை (CISA) நாடு முழுவதும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.