Posted in

“வேலுநாச்சியார் வழியில் அக்கா த்ரிஷா” – மதுரையில் திடீரென முளைத்த நற்பணி மன்ற போஸ்டர்கள்!

தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷாவுக்கு, கோயில் நகரமான மதுரையில் முதன்முறையாக “திரிஷா நற்பணி மன்றம்” என்ற பெயரில் புதிய ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நற்பணி மன்றம் சார்பில் நகரின் முக்கிய இடங்களான மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுவட்டாரம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விசித்திரமான மற்றும் கெத்தான போஸ்டர்கள் தற்போது தமிழக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்தச் சுவரொட்டிகளில், “எந்தவொரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை! மதுரை மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால், தமிழக சங்க வரலாற்றிலேயே முதல்முறையாக எங்கள் அன்பு அக்கா த்ரிஷாவிற்குத் தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், “தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில்” என்ற முழக்கத்துடன் வீரமங்கை வேலுநாச்சியாரின் உருவப்படமும் அச்சிடப்பட்டு த்ரிஷாவை அரசியலுக்கு அழைக்கும் தொனியில் சுவரொட்டிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட உலகில் உச்சத்தில் இருக்கும் த்ரிஷா, அடுத்த கட்டமாக அரசியலில் காலடி எடுத்து வைக்கக்கூடும் என கடந்த சில காலமாகவே பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்தச் சூழலில், “அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்” என்றும் “வேலுநாச்சியார் வழி” என்றும் மதுரையில் ரசிகர்கள் வைத்துள்ள இந்த அதிரடி போஸ்டர்கள், த்ரிஷாவின் அரசியல் வருகை குறித்த யூகங்களை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளன.

பொதுவாகத் திரைப்படங்கள் மற்றும் முக்கிய அரசியல் நிகழ்வுகளுக்கு ஒட்டப்படும் போஸ்டர்களைக் கடந்து செல்லும் மதுரை மக்கள், இந்தத் த்ரிஷா நற்பணி மன்ற போஸ்டர்களை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீ போல வைரலாகி வரும் நிலையில், இது ரசிகர்களின் உற்சாக மிகுதியால் ஒட்டப்பட்ட போஸ்டரா அல்லது த்ரிஷா உண்மையிலேயே அரசியல் பாதையைத் தேர்வு செய்யப் போகிறாரா என்பது குறித்த விவாதங்கள் இணையத்தில் அனல் பறக்கின்றன.