தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்தின் அறைக்குச் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. அன்பழகம் ஆகியோர் சந்தித்துப் பேசிய நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்த செய்திகள் காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து, சந்திப்பின் பின்னணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி, இந்தச் சந்திப்பிற்கு எந்தவிதமான அரசியல் பின்னணியோ அல்லது உள்நோக்கமோ இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். “தங்களது தொகுதி சார்ந்த மக்களின் கோரிக்கைகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பான வழக்கமான அரசு ரீதியான விவாதங்களுக்காகவே அமைச்சரை நேரில் சந்தித்தோம். இது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களைச் சந்திக்கும் ஒரு சாதாரண நடைமுறை தான்” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சமீபகாலமாக அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சிப் பூசல்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், தவெகவைச் சேர்ந்த அமைச்சருடன் மூத்த நிர்வாகிகள் சந்தித்துப் பேசியது பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, சில எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் சாய்ந்து வருவதாக வெளியாகும் தகவல்களுக்கு மத்தியில் நடந்த இந்தச் சந்திப்பு, அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு இவர்கள் உடனடி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சட்டப்பேர வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பைக் கூட அரசியல் சாயம்பூசிச் சித்தரிப்பது சரியல்ல என அவர்கள் தெரிவித்தனர். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதற்காக அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்திப்பது தங்களது கடமை என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர்கள், கட்சி மாறப்போவதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தியே எனக் கூறி அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.