உத்தரப் பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், ஆன்லைன் கேமிங் விளையாட்டில் அடிமையாகி சுமார் ₹3 லட்சம் வரை கடனில் மூழ்கியுள்ளார். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி அதிகரித்ததால், தன் தந்தையிடம் பணம் பறிப்பதற்காகத் தன் சொந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டார்.
டெல்லியில் உள்ள தனது பெண் தோழியின் உதவியோடு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் கண் பலமாக காயமடைந்தது போல் ஒரு புகைப்படத்தை உருவாக்கினார். அந்த போலி AI புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி, தன்னை மர்ம நபர்கள் கடத்திவிட்டதாகவும், ₹1 லட்சம் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். தந்தை ஆன்லைன் பணம் அனுப்ப முடியாது என்று கூறியதால், பணப் பிணைத் தொகையை ₹2 லட்சமாக உயர்த்தினார்.
பயந்துபோன தந்தை உடனே காவல்துறையை அணுகி புகார் அளித்தார். செல்போன் சிக்னல் மற்றும் சைபர் கண்காணிப்பு மூலம் விசாரணையை முடுக்கிவிட்ட காவல்துறையினர், நள்ளிரவு 2 மணி அளவில் உருவா பஜார் பகுதியில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் அந்த மாணவனைப் பத்திரமாக மீட்டனர்.
விசாரணையில், ஆன்லைன் கேமிங் கடனை அடைக்கவே தந்தைக்கே தெரியாமல் இந்த AI கடத்தல் நாடகத்தை ஆடியதை மாணவன் ஒப்புக்கொண்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எச்சரிக்கையுடன் இருக்குமாறு பெற்றோருக்குக் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.