உக்ரைன் போரில் கெய்வ் அரசிற்குத் தொடர்ந்து ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வரும் பிரிட்டன் மீது, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் பழிவாங்கும் நோக்கில் மறைமுக நிழல் யுத்தத்தைத் (Shadow Warfare) தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் பிரிட்டிஷ் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகள் ‘ரெட் அலர்ட்’ (Red Alert) எச்சரிக்கை விடுத்துள்ளன.
ரஷியாவிற்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு லண்டன் வழங்கிய நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்த அனுமதி அளித்ததற்குப் புடின் கடும் ஆத்திரத்தில் உள்ளார். உக்ரைனின் மற்ற ஐரோப்பிய நட்பு நாடுகளுக்குப் பாடம் புகட்டும் வகையில், பிரிட்டனை முதன்மை இலக்காக வைத்து ரஷியாவின் ராணுவ உளவு அமைப்பான ஜி.ஆர்.யு (GRU) ‘ஹைப்ரிட் போர்’ (Hybrid Warfare) உத்திகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் நேரடி ராணுவ மோதலில் ஈடுபடாமல், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் உத்திகள் அடங்கியுள்ளன.
பிரிட்டனின் லண்டன் நகரில் உக்ரைனுக்கு அனுப்பப்படும் ராணுவத் தளவாடங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்குகள் மீது நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவங்கள் மற்றும் ஜெர்மனியின் லைப்சிக் விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் கூடிய ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் ரஷியாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் தொடக்கப் புள்ளியாகப் பார்க்கப்படுகின்றன. இதுதவிர, பிரிட்டிஷ் வான்வெளியில் ட்ரோன் தாக்குதல்கள், முக்கியமான உள்கட்டமைப்பு தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள், இணையவழித் தகவல் தொடர்பை துண்டிக்கும் நோக்கில் அட்லாண்டிக் கடலடி ஃபைபர் கேபிள்களைச் சேதப்படுத்துதல் மற்றும் கூலிப்படையினர் மூலம் முக்கியமான ஆலைகளுக்குத் தீ வைப்பது போன்ற ஆபத்தான வழிகளில் ரஷியா தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நேட்டோ உறுப்பு நாடான பிரிட்டன் மீது ரஷியா நேரடியாக ஏவுகணை வீசினால் அது உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பதால், புடின் ‘கிரே ஜோன்’ (Grey Zone) எனப்படும் மறைமுகச் சதித்திட்டங்கள் மூலம் பிரிட்டனை முடக்கப் பார்க்கிறார். உக்ரைனுக்கான ஆதரவைக் குறைப்பதே இதன் நோக்கம் என்ற போதிலும், பிரிட்டன் தனது தேசியப் பாதுகாப்பையும் கடலடி உள்கட்டமைப்புகளையும் பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.