அமெரிக்கப் படைகள் ஈரானின் 5 கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல்களைத் தாக்கி அழித்ததற்குப் பதிலடியாக, ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள அதேவேளையில், ஹொர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் அதிநவீன ரகசிய ‘ட்ரோன் நீர்மூழ்கிக் கப்பலை’ ஈரான் கைப்பற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல் படையின் (IRGC) எண்ணெய் டேங்கர்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் (Al-Azraq) மற்றும் முவஃபக் சால்டி (Muwaffaq Salti) அமெரிக்க வான்படை தளங்கள் மீது ஈரான் 20 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் 18 ஏவுகணைகளை ஜோர்டான் வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கியதில் அமெரிக்கப் போர் விமானங்களின் தங்குமிடங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், சர்வதேச வர்த்தகப் பாதையான ஹொர்முஸ் நீரிணையின் முகத்துவாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘டிவ்-எல்டி’ (Dive-LD) என்ற அதிநவீன தன்னாட்சி நீர்மூழ்கி ட்ரோனைத் தங்களது கடற்படை கைப்பற்றியதாக ஈரான் அறிவித்துள்ளது. 5.8 மீட்டர் நீளமுள்ள இந்த ட்ரோன், கடலுக்கு அடியில் உளவு பார்ப்பது, கண்ணிவெடிகளைக் கண்டறிவது மற்றும் கேபிள்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், பழுதடைந்த பழைய மாடல் ட்ரோன் ஒன்று ஒரு நாளுக்கு முன்பே கட்டுப்பாட்டை இழந்து கடலில் மிதந்ததாகவும், அதில் இரகசியத் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அமெரிக்கப் பென்டகன் தெரிவித்துள்ளது. சவூதி, ஜோர்டான் மற்றும் ஹொர்முஸ் நீரிணைப் பகுதிகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்தி வரும் தாக்குதல்களால் சர்வதேசச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $99 டாலரைக் கடந்து உயர்ந்துள்ளதுடன், மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.