Posted in

விஜய் – த்ரிஷா சர்ச்சை குறித்து பாஜக் எம்பி கங்கனா ரணாவத் காட்டமான கண்டனம்!

தமிழகச் சமூக வலைத்தளங்களில் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் பிரபல நடிகை த்ரிஷா இடையிலான தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் உறவு குறித்துப் பரப்பப்படும் விமர்சனங்களுக்கு பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹிமாசலப் பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத், “தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். மதிப்பிற்குரிய ஒரு நடிகருக்கும் நடிகைக்கும் இடையே எழும் பிரச்சனைகளில், எப்போதும் பெண்ணின் கண்ணியமே முதலில் பலிகடா ஆக்கப்பட்டு விவாதப் பொருளாக்கப்படுகிறது” எனக் குற்றம் சாட்டினார்.

சமூகத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்தும் மனநிலை குறித்துச் சாடிய அவர், “ஒரு பெண் தனது திறமையால் வெற்றி பெற்று, சமூகத்தில் தலைமைப் பொறுப்பிலோ அல்லது அதிகாரப் பதவியிலோ இருக்கும்போது, அவரை வீழ்த்துவதற்கு அவரின் தனிப்பட்ட நடத்தையைக் கொச்சைப்படுத்துவதையும் கண்ணியத்தின் மீது கல் எறிவதையுமே ஆண்கள் முதல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய போக்கு நீடித்து வருகிறது” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

சமூகமாக நாம் நம்மையே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட கங்கனா, பெண்களுக்கு உண்மையான மரியாதையை நாம் அளிக்கிறோமா என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். காவேரி போராட்டத்தின் போது தனிப்பட்ட விமர்சனங்கள் எழுந்ததும், அதற்கு எதிரான விவாதங்கள் பரவியதும் குறிப்பிடத்தக்க நிலையில், கங்கனாவின் இந்த அதிரடி ஆதரவுப் பேச்சு திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.