Posted in

9/11 தாக்குதலின் போது தீயணைப்பு வீரர்கள் என்னைத் தூக்கிச் சென்றனர் – சர்ச்சையைக் கிளப்பிய டிரம்பின் புதுக் கதை..

செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாக்குதலின் போது இரு உயரமான தீயணைப்பு வீரர்கள் தன்னைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடியதாகத் தெரிவித்த புதிய தகவல், அமெரிக்க ஊடகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனில் உள்ள எலிப்ஸ் பகுதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “தாக்குதல் நடந்த உடனேயே எனது கட்டுமானப் பணியாளர்களை அழைத்துக்கொண்டு கிரவுண்ட் சீரோ பகுதிக்குச் சென்றேன். அப்போது அருகில் இருந்த யு.எஸ். ஸ்டீல் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் சத்தம் எழுப்பியது. உடனே இரண்டு பலசாலிகளான தீயணைப்பு வீரர்கள் வந்து, என்னை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடிப் பாதுகாத்தனர்” எனக் கூறினார்.

இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் அமெரிக்க முன்னணி ஊடகங்கள் மற்றும் உண்மைச் சரிபார்ப்பு (Fact-Check) அமைப்புகள் தெரிவித்துள்ளன. 2001 செப்டம்பர் 11 அன்று தாக்குதல் நடந்த போது டிரம்ப் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல மைல்கள் தொலைவில் உள்ள தனது ‘டிரம்ப் டவர்’ கட்டிடத்தில் இருந்தார் என்பதும், தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகே அவர் அப்பகுதிக்கு வந்தார் என்பதும் ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நியூயார்க் தீயணைப்புத் துறையின் அன்றைய அதிகாரிகளும், டிரம்பை தீயணைப்பு வீரர்கள் தூக்கிச் சென்றதாகவோ அல்லது அவர் கூறியது போல 100-க்கும் மேற்பட்ட டிரம்பின் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகவோ எந்தப் பதிவுகளும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். 9/11 நினைவேந்தல் நிகழ்வில் டிரம்ப் தனது பங்களிப்பு குறித்து வழக்கம்போல மிகைப்படுத்திப் பேசியிருப்பது எதிர்க்கட்சிகளாலும் சமூக ஆர்வலர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.