தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவித்த ரூ.1,200 கோடி மதிப்பிலான புதிய தலைமைச் செயலகத்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கும் அரசு அதிகாரிகளின் முடிவுக்குப் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தைப் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
அரசின் இந்த முடிவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஏற்கனவே சாந்தோம் மற்றும் பசுமைவழிச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வரும் சூழலில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் நெரிசல் கட்டுக்கடங்காமல் போகும். மேலும், 15 மாடிக் கட்டிடம், மருத்துவமனை, உணவகம் மற்றும் வாகன நிறுத்தங்கள் அமைக்க இந்த 26 ஏக்கர் நிலம் முற்றிலும் போதுமானதாக இருக்காது” எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, குறுகிய இடத்தில் அவசரக்கதியில் திட்டத்தைச் செயல்படுத்துவதைத் தவிர்த்து, சென்னைக்கு வெளியே அனைத்து வசதிகளுடனும் கூடிய விசாலமான தனி ‘நிர்வாக நகரம்’ (Administrative City) அமைத்து அங்குப் புதிய தலைமைச் செயலகத்தைக் கொண்டு வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமகவின் இந்த உடனடி எதிர்ப்பு, புதிய தலைமைச் செயலகத்திற்கான இடம் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.