தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்கக் கூடாது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) பெரும்பான்மையான நிர்வாகிகள் உறுதியாக இருப்பதாகவும், அதனால் தவெகவுக்கு ஆதரவளிக்க அக் கட்சி மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக 108 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைத்தது. அதற்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக அமைச்சரவையில் இணைய மறுத்துத் தங்களின் தனித்துவத்தைத் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. இந்நிலையில், இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு தவெக சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்க, சிபிஐ மாநிலப் பொதுச்செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாகச் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் வேறு சின்னத்தில் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டினர். “வெறும் 3 மாதங்களுக்குள் பதவியை துறந்துவிட்டு சுயநல அரசியலுக்காகப் புதிய கட்சி சார்பில் களம் நிற்கும் இந்த தவறான முன்மாதிரியை கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஆதரிக்க முடியாது” என நிர்வாகிகள் காரசாரமாகத் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
மாநில நலன் கருதியே தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், இந்த இடைத்தேர்தலில் ஆதரவளித்தால் அது தவறான அரசியல் முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். செயற்குழு கூட்டத்தின் முழுமையான முடிவுக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ள நிலையில், தவெகவுக்கான ஆதரவு நிலைப்பாடு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் கள் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.