வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மிக நெருங்கிய தொழிலதிபர் கூட்டாளியும், பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதியை முறைகேடாகக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவருமான அலெக்ஸ் சாப் (Alex Saab), அமெரிக்காவின் மயாமி கூட்டாட்சி நீதிமன்றத்தில் பண மோசடி (Money Laundering) குற்றச்சாட்டை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கொலம்பியாவில் பிறந்த 54 வயதான தொழிலதிபர் அலெக்ஸ் சாப், வெனிசுலா நாட்டில் மக்கள் கடும் உணவுப் பஞ்சத்தால் தவித்த போது, அந்நாட்டு அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஒதுக்கிய பில்லியன் கணக்கிலான நிதியில் முறைகேடு செய்து, போலி நிறுவனங்கள் மூலம் லஞ்சம் கொடுத்துப் பண மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியிருந்தது. சாப் மீது சுமத்தப்பட்ட இந்த ஒற்றைப் பண மோசடிச் சதி வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்குப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடும்.
அமெரிக்க அதிகாரிகளால் “மதுரோவின் கறுப்புப் பணப் பையன்” (Maduro’s Bagman) என வர்ணிக்கப்பட்ட சாப், கடந்த 2020-இல் கேப் வெர்டே தீவில் கைது செய்யப்பட்டு 2021-இல் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் விடுவிக்கப்பட்ட போதிலும், மீண்டும் புதிய வழக்கின் அடிப்படையில் விசாரணையை எதிர்கொண்டு வந்த அவர், தற்போது மயாமி நீதிபதி கேத்லின் வில்லியம்ஸ் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் வழக்கு புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது.
நியூயார்க்கில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிராக அரசுத் தரப்புச் சாட்சியாக அலெக்ஸ் சாப் மாறக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க அரசியலிலும் அமெரிக்க நீதித்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலம், வெனிசுலா ஆட்சியாளர்களின் சர்வதேசப் பணச் சங்கிலியை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது.