Posted in

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா, ரஷ்யா; போர்க்களமாகும் விண்வெளி!

அமெரிக்கப் படைப் பிரிவுகளின் பாதுகாப்பிற்காக பூமியின் சுற்றுப்பாதையில் தாக்கும் திறன் கொண்ட தாக்குதல் ஆயுதங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளதாக உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, “விண்வெளியில் போருக்குத் தயார் ஆவதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விண்வெளியைப் போர்க்களமாக மாற்றுவதையும், அங்கு புதிய ஆயுதப் போட்டியை உருவாக்குவதையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது; அமெரிக்கா தனது ராணுவ விரிவாக்கத்தையும் விண்வெளிப் போர் ஆயத்தங்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். அதேபோன்று, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “விண்வெளி பகுதி எந்தவொரு ஆயுதமும் இல்லாத களமாக இருக்க வேண்டும் என்பதே ரஷ்யாவின் விருப்பம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க விண்வெளிப் படை தங்களின் ‘ஸ்பேஸ் கன்ட்ரோல்’ ஆயுதங்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளதாக அறிவித்ததோடு, சீனா மற்றும் ரஷ்யாவின் வளர்ந்து வரும் விண்வெளி ராணுவத் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவே இந்த நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டியிருந்தது. 1967-ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி அணுஆயுதங்களுக்கு மட்டுமே தடை உள்ள நிலையில், ஏவுகணை எதிர்ப்பு மற்றும் லேசர் போன்ற வழக்கமான ஆயுதங்களை நிலைநிறுத்துவது தொடர்பாக உள்ள சட்ட இடைவெளியை அமெரிக்கா சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது சர்வதேச நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

உலகின் முதன்மை வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுமே செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பங்களை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த பகிரங்க விண்வெளி ஆயுத அறிவிப்பு விண்வெளிப் பாதுகாப்பில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஐநா பேரவையின் ஆயுதக் குறைப்பு மாநாட்டில் இந்த விண்வெளி ஆயுதமயமாக்கல் குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.