ஈரானில் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா போர்க்குற்றங்களில் (War Crimes) ஈடுபட்டதாக நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தனது அறிக்கையில் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த அறிக்கை, உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு ஈரானின் மீனாப் (Minab) நகரில் உள்ள ‘ஷஜாரே தய்யிபா’ தொடக்கப் பள்ளி மீது அமெரிக்கப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 120 பள்ளி குழந்தைகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதே நாளில் லாமர்ட் (Lamerd) நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் மற்றும் குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 22 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த இரு தாக்குதல்களுமே பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைக் கவனத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் என ஐ.நா. வல்லுநர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் தாக்குதல்கள் குறித்துப் போதிய உளவுத்துறைத் தகவல்களைச் சரிபார்க்காமல் அமெரிக்க ராணுவம் அவசரப்பட்டுச் செயல்பட்டதே இந்த அதிகப்படியான பொதுமக்கள் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளையில், ஈரானில் அரசுக்கெதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது ஈரான் அரசுப் படைகளும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் (Crimes against Humanity) ஈடுபட்டு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைக் கொன்று குவித்ததாக ஐ.நா. குழு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைக் கடுமையாக மீறியுள்ளதாகச் சாடியுள்ள ஐ.நா. உண்மை கண்டறியும் குழு, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. போரினால் பொதுமக்கள் தொடர்ந்து பலியாகி வரும் சூழலில், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.