Posted in

ஷேக் ஹசீனாவுக்கு அடுத்து 7 அவாமி லீக் தலைவர்களுக்கு மரண தண்டனை! பங்களாதேஷில் அதிரடி தீர்ப்பு

பங்களாதேஷில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலை மாணவர் புரட்சியின் போது (July Uprising) பொதுமக்களுக்கு எதிராக மனிதநேயமற்ற முறையில் வன்முறையைத் தூண்டியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில், தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஒபைதுல் காதர் உட்பட 7 மூத்த தலைவர்களுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-2) மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சௌத்ரி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியது. அவாமி லீக் பொதுச்செயலாளர் ஒபைதுல் காதர், இணைப் பொதுச்செயலாளர் பஹாவூதீன் நசீம், முன்னாள் செய்தித் துறை இணையமைச்சர் முகமது அலி அராஃபத், யுவ லீக் மற்றும் சத்ரா லீக் அமைப்புகளின் முன்னணி நிர்வாகிகளான ஷேக் ஃபஸ்லே ஷாம்ஸ் பராஷ், மைனுல் ஹொசைன் கான் நிகில், சக்ஷாம் உசேன் மற்றும் ஷேக் வாலி ஆசிஃப் இனான் ஆகிய 7 பேருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள இந்த 7 பேர் மீதும் சுமத்தப்பட்ட கொலை, தூண்டுதல், வன்முறைச் சதி மற்றும் ஊடகங்களை முடக்கிய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தலைமை வழக்கறிஞர் அமீனுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகளில் 5 பேரின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் பாதியை பறிமுதல் செய்து, வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு இதே தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில், தற்போது அவரது முதன்மைப் தளபதிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பங்களாதேஷ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடியுள்ள இந்த நிர்வாகிகளைக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வரத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இடைக்கால அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.