Posted in

தமிழக அரசு வங்கிக் கணக்கிலிருந்து ₹22.30 கோடி சைபர் மோசடி: சென்னை போலீஸ் 7 பேர் கைது

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வங்கிக் கணக்கிலிருந்து ₹22.30 கோடி பணத்தை இணையவழியில் மோசடி செய்த வழக்கில், சென்னை மத்திய குற்றப் பிரிவு (CCB) சைபர் கிரைம் போலீசார் 7 பேரைக் கைது செய்துள்ளனர். சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் பராமரிக்கப்பட்டு வந்த 15-வது நிதிக்குழு சுகாதார மானியத் திட்ட நிதியிலிருந்து, கடந்த அக்டோபர் 12 முதல் 30-ஆம் தேதி வரை இந்தப் பணம் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் கீழையூர், ராமநாதபுரம் மண்டபம் மற்றும் திருப்பூர் தாராபுரம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலர்களின் (BDO) பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொற்களைத் திருடி சைபர் குற்றவாளிகள் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். சுமார் 46 பரிவர்த்தனைகள் மூலமாக ₹22,30,04,879 பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி, கமிஷனுக்காக வங்கிக் கணக்குகளை வழங்கிய ‘மணி மியூல்’ (Money Mule) கும்பல் மூலம் பணத்தைச் சுருட்டியுள்ளனர்.

ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் ராம்பிரசாத் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சென்னை செல்லபாண்டியன், கரும்பூர் அண்ணாதுரை, பெங்களூரு லோகநாதன், மதுரை அப்துல் ரஹ்மான், ஜெகதீஷ் மற்றும் சிவகங்கை அஷ்ரஃப் அலி, கண்ணதாசன் ஆகிய 7 பேரைக் கைது செய்தனர். அரசு அலுவலர்கள் தங்களது இணைய வங்கி பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் விவரங்களை யாருடனும் பகிரக்கூடாது என்றும், அரசு வங்கிக் கணக்குகளுக்குக் கூடுதல் சைபர் பாதுகாப்பு அவசியம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் செல்லபாண்டியன், அண்ணாதுரை மற்றும் லோகநாதன் ஆகிய மூவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரிடமும் மோசடிப் பணத்தை மீட்பது குறித்தும், இந்தச் சைபர் மோசடி பின்னணியில் வெளிநாட்டுக் கும்பலுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.