டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் ரத்தீஷ் ராஜ் சண்முகவேலுக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேடப்படும் குற்றவாளிகளின் பொதுப் பட்டியலில் ரத்தீஷின் பெயர் இடம்பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-2026 திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கொள்முதல், பார் உரிமம் மற்றும் போக்குவரத்து டெண்டர் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத் துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரத்தீஷ் வெளிநாடு தப்பியோடியதால், அவருக்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது இன்டர்போல் இணையதளத்தில் மொத்தமுள்ள 6,373 ரெட் நோட்டீஸ் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 222 பேரின் விவரங்கள் மட்டுமே பொதுவெளியில் காண்பிக்கப்படுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது அல்லது பொதுமக்களின் உதவி தேவைப்படும்போது மட்டுமே சம்பந்தப்பட்ட நாட்டின் கோரிக்கையின் பேரில் தேடப்படும் நபர்களின் விவரங்கள் இன்டர்போல் இணையதளத்தில் பகிரப்படும் என்பது விதியாகும்.
எனவே, விசாரணை அமைப்புகளின் கோரிக்கையின்படி ரத்தீஷுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, அது காவல்துறையினரின் உள்வட்டாரப் பயன்பாட்டிற்காக மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தெளிவுபடுத்தல் தேவைப்படுகிறது. இது தொடர்பாக மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலிருந்து முறையான விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.