சென்னை பெசன்ட் நகர் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகியான கண்ணன் (45) ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிடிபட்ட கல்லூரி மாணவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 17 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலைக்குப் பழிக்குப்பழி வாங்கவே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வண்ணான்துறை ராமசாமி அவென்யூ பகுதியில் வசித்து வந்த கண்ணன், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரைச் சூழ்ந்த மர்மக் கும்பல் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிச் சாய்த்துவிட்டுத் தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சாஸ்திரி நகர் காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 வயதே ஆன தனியார் கல்லூரி மாணவர் ஒருவரும் அடங்குவார் என்பது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தீவிர விசாரணையில், கடந்த 2009-ஆம் ஆண்டு ‘சிவா’ என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது கொலையுண்ட கண்ணன் முதன்மைப் குற்றவாளியாக இருந்துள்ளார். தனது உறவினரான சிவாவின் கொலைக்குப் பழிவாங்குவதற்காகவே, அந்தக்கல்லூரி மாணவர் தனது நண்பர்களை ஒன்றிணைத்துத் திட்டம் தீட்டி கண்ணனைக் படுகொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தலைநகரில் தவெக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அடையாறு துணை ஆணையர் மற்றும் சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பழிகவாங்கும் நோக்கத்துடன் கல்லூரி மாணவர் ஒருவரைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட இந்தத் திட்டமிட்ட படுகொலைச் சம்பவம் சென்னை அரசியல் மற்றும் பொதுமக்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.