Posted in

அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் சீனாவின் டிஜிட்டல் உளவு கோட்டை! புதிய தகவல்கள் பரபரப்பு

அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவில், அமெரிக்க எல்லையிலிருந்து வெறும் 100 மைல் (சுமார் 145 கி.மீ.) தொலைவில் சீனா அதிநவீன நிலத்தடி உளவு தளம் மற்றும் சிக்னல் உளவு (SIGINT) உள்கட்டமைப்புகளை தீவிரமாக விரிவாக்கம் செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள முக்கிய ராணுவ தளங்களின் அசைவுகள் மற்றும் கியூபா மீதான அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு திட்டங்களை பெய்ஜிங் இதன் மூலம் மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் CSIS (Center for Strategic and International Studies) ஆய்வறிக்கையின்படி, கியூபாவின் ‘பெஜுகல்’ (Bejucal) போன்ற பகுதிகளில் பூமிக்கு அடியில் பிரம்மாண்டமான நிலத்தடி சுரங்க வழிகளும், ராட்சத வட்டவடிவ ஆண்டெனாக்களும் (CDAA) அமைக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 1962-ல் சோவியத் யூனியனின் அணு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இதே வரலாற்று சிறப்புமிக்க பெஜுகல் பகுதி, தற்போது சீனாவின் நவீன தகவல் போர்முறையின் (Information Warfare) முக்கிய மையமாக மாறியுள்ளது. இந்த நிலத்தடி உளவு நகரங்கள் மூலம் அமெரிக்க வான்வெளி மற்றும் கடல்சார் தகவல் தொடர்புகளை சீனா எளிதாக இடைமறித்து உறிஞ்சி வருவதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (US Central Command) மற்றும் சதர்ன் கமாண்ட் (US Southern Command) ஆகிய முக்கிய ராணுவ தலைமையகங்கள் புளோரிடாவிலேயே அமைந்துள்ளதால், அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு இந்த உளவுத்தளங்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. குறிப்பாக, கியூபா விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் ராணுவ திட்டங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு நெறிமுறைகளை இந்த உளவு மையங்கள் துல்லியமாக வேவு பார்க்க முடியும் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தை மிகத்தீவிரமான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவித்துள்ளனர்.

2026-ல் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் கியூபா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள சூழலில், இந்த உளவு நகரங்களின் விரிவாக்கம் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கியூபாவில் மொத்தம் கண்டறியப்பட்டுள்ள 18 மின்னணு உளவு தளங்களில், 3 தளங்களை சீனாவும், 2 தளங்களை ரஷ்யாவும் நேரடியாகவும் கூட்டாகவும் இயக்கி வருவதாக உளவுத்துறை தரவுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் ‘கொல்லைப்புறத்தில்’ சீனா அமைத்துள்ள இந்த டிஜிட்டல் உளவுப் வலைப்பின்னல், பனிப்போர் காலத்து அச்சுறுத்தல்களை மீண்டும் நினைவூட்டுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply