பதவியேற்பு விழா முடிந்த பின்னர் மேடையில் உரையாற்றிய முதல்வர் விஜய், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மிகவும் சவாலாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். “தமிழக அரசின் கடன் சுமை ₹10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில், கஜானா காலியாக உள்ளது. இத்தகைய சூழலில் பொறுப்பேற்றுள்ள நான், எதையும் அவசரப்பட்டு மேஜிக் போலச் செய்ய முடியாது. எனவே, அரசு இயந்திரத்தை முறையாகச் சீரமைக்க எனக்குச் சற்று அவகாசம் தேவை. நிதிநிலை குறித்த உண்மையான நிலையை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது அரசின் முதல் இலக்கு ஆடம்பரத் திட்டங்கள் அல்ல, மாறாகப் பொதுமக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளே என்றார். “தூய்மையான குடிநீர், தரமான சாலைகள், தடையற்ற மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசுப் பள்ளிகள் ஆகிய அடிப்படை வசதிகளை ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் கொண்டு சேர்ப்பதே எனது முதல் கடமை. பெரிய திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை; எவை சாத்தியமோ அவற்றை மட்டுமே உறுதியாகச் செய்வேன்” என்று அவர் பேசினார். இந்த வெளிப்படையான பேச்சு மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாகத் திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு ஒரு புதிய விடியலை நோக்கித் தமிழகம் பயணிப்பதாகக் குறிப்பிட்ட விஜய், “ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே எனது லட்சியம். ஒரு ரூபாய் பொதுப்பணத்தைக் கூடத் தவறாகப் பயன்படுத்த மாட்டேன்” என்று உறுதி அளித்தார். மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சியைத் தனது கொள்கையாக முன்மொழிந்த அவர், தனக்கு வாக்களித்த இளைஞர்களுக்கும், ‘விஜய் மாமா’ என்று அழைத்து ஆதரவு கொடுத்த சிறுவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
முதல்வர் விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “பொய்களைக் கூறி மக்களைக் கவர முயலாமல், யதார்த்தமான நிதி நெருக்கடியைப் பேசி அவகாசம் கேட்டிருப்பது ஒரு பக்குவமான அரசியல் அணுகுமுறை” என்கின்றனர். பதவியேற்ற முதல் நாளே 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற அதிரடித் திட்டங்களை அறிவித்தாலும், நிர்வாகச் சிக்கல்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பது விஜய்யின் நேர்மையான அரசியலைக் காட்டுவதாக அவரது ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.