கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையம் பகுதியில் நள்ளிரவில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், அஸ்வின் என்ற வாலிபரை அவரது நண்பர்களே கத்தியால் குத்தியும் சுத்தியலால் அடித்தும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலையைச் செய்த பிறகு உயிரிழந்த நண்பனின் உடலுடன் கொலையாளிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த செயல் பொதுமக்களை உரைய வைத்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அஸ்வின் தனது நண்பர்களான தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து தனியான இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். மதுபோதை தலைக்கேறிய நிலையில், நண்பர்களுக்குள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது. போதையின் உச்சத்தில் ஆத்திரமடைந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் கத்தியால் அஸ்வினின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியதுடன், சுத்தியலாலும் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அஸ்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொடூரத்தின் உச்சமாக, நண்பன் இறந்து கிடப்பதை உணர்ந்தும் எந்தவித பயமுமின்றி, அஸ்வினின் சடலத்திற்கு அருகே நின்று இருவரும் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை காவல்துறையினர் அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரையும் தீவிரத் தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்த போலீசார், அவர்களின் செல்போனைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையால் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை சம்பவம் கோவை மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.