தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சமூக வலைதள வீடியோ ஒன்று மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான திமுக, அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஜூன் 29 (திங்கட்கிழமை) அன்று தமிழகம் தழுவிய அளவில் பிரம்மாண்ட கண்டனப் போராட்டத்தை நடத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுகவின் மாணவரணி சார்பில் இந்தத் தொடர் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தின் கேலரியில் அமர்ந்துகொண்டு, அமைச்சர் சரத்குமார் தனது மொபைல் போனின் திரையின் மீது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வெள்ளை நிறப் பவுடர் போன்ற ஒரு பொருளை நசுக்கித் தூளாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு ‘தக் லைஃப்’ (Thug Life) என்ற கேப்ஷனுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் பகிரப்பட்டதாகக் கூறப்படும் இந்த பழைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ, தற்பொழுது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நபர் ஒருவர் போதைப்பொருளை நுகர்வதற்காகத் தயார் செய்யும் பாணியிலேயே அச்சு அசலாக இருப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள அமைச்சர் சரத்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து ஒரு அவசர விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி பார்க்கச் சென்றபோது, தனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், முழு மாத்திரையை விழுங்க முடியாத குழந்தைக்குத் தண்ணீரில் கலந்து கொடுப்பதற்காகவே கிரெடிட் கார்டு மூலம் மாத்திரையைத் தூளாக்கியதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் கூட்டத்திற்கு நடுவே தம்மால் எப்படிப் போதைப்பொருள் பயன்படுத்த முடியும் என்றும், அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்படும் இந்த வதந்தி தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சென்னையில் மாரத்தான் ஓட்டத்தைத் தொடங்கி வைத்துப் போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிய அதே நாளில், அவரது சொந்த அமைச்சரவைச் சேர்ந்தவர் மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது தவெக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பில் தவெக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், முதல்வர் விஜய் உடனடியாகத் தனது அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தவெக மற்றும் திமுக தொண்டர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் தற்பொழுது கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.