அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மனித வரலாற்றிலேயே வாழ்ந்த உலகத் தலைவர்கள் அனைவரையும் விடத் தான் தான் “மிகவும் சக்திவாய்ந்த மனிதன்” (Most Powerful Man on Earth Ever) என்று நம்புவதாகவும், அதனைப் பெருமையுடன் பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வெளிவந்துள்ள புதிய தகவல்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகையாளர்கள் எழுதியுள்ள புதிய புத்தகம் ஒன்றின் விபரங்கள் கசிந்த சில மணி நேரங்களிலேயே, அதனை உறுதிப்படுத்தும் வகையில் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ (Truth Social) பக்கத்தில் ஒரு அதிர்ச்சிப் பதிவை பகிர்ந்துள்ளார்.
அடுத்த வாரம் வெளியாகவுள்ள பத்திரிகையாளர்கள் மேகி ஹேபர்மேன் மற்றும் ஜொனாதன் ஸ்வான் ஆகியோரின் ‘ரெஜிம் சேஞ்ச்’ (Regime Change) என்ற புதிய புத்தகத்தில் டிரம்பின் இந்த விசித்திரமான மனநிலை அம்பலமாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் அவர்கள் டிரம்பை நேர்காணல் செய்தபோது, உலக வரலாற்றில் தனது இடம் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்கத் தன் உதவியாளர்களை அழைத்து இரண்டு பக்க வரலாற்று அறிக்கை ஒன்றை டிரம்ப் வரவழைத்துள்ளார். கோல்ஃப் விளையாட்டின் போது ஒரு வரலாற்று ஆய்வாளர் தனக்கு இதைக் கொடுத்ததாகக் கூறி, அதில் இருந்த மாவீரன் அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் மற்றும் சர்வாதிகாரிகளான ஹிட்லர், ஸ்டாலின், மாவோ போன்றோரின் பெயர்களை வாசித்துக் காட்டிய டிரம்ப், அவர்கள் அனைவரையும் விடத் தான் தான் அதிக அதிகாரம் படைத்தவர் என வாதிட்டுள்ளார்.
புத்தகத்தில் உள்ள இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, டிரம்ப் இன்று அதிகாலை தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அந்த வரலாற்று அறிக்கையின் சுருக்கத்தை அப்படியே பகிர்ந்து, “Sounds good to me!” (எனக்கு இது நன்றாகவே கேட்கிறது) என்று பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வரலாற்றில் சக்திவாய்ந்த மனிதர்கள் அனைவரும் மக்களைக் கொன்று குவித்து, பயத்தை ஏற்படுத்தியே ஆட்சியைத் தக்கவைத்தனர். ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்களைப் பயமுறுத்தாமல், தனது அசாத்தியமான ஆளுமை மற்றும் உலகின் மிகச் சிறந்த ராணுவ பலத்தின் மூலம் அவர்களை விட அதிக பவரை தன்வசப்படுத்தியுள்ளார்” என எழுதப்பட்டிருந்தது. சர்வாதிகாரிகளுடன் தன்னை ஒப்பிடுவதை டிரம்ப் ரசித்து ஏற்பது இதுவே முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போருக்குப் பிறகு, தனது அதிகாரத்திற்கு எல்லையே இல்லை (No Limits) என்று டிரம்ப் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் இப்புத்தகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராகத் தனக்குக் கிடைத்துள்ள எல்லையற்ற ராணுவ மற்றும் அணுஆயுத அதிகாரத்தைக் கண்டு டிரம்ப் மிரண்டு போகாமல், தன்னை ஒரு வரலாற்றுப் பேரரசராகப் பார்க்கத் தொடங்கியுள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன. வாஷிங்டன், லிங்கன் போன்ற அமெரிக்கத் தலைவர்களுடன் தன்னை ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, இப்போது அலெக்சாண்டர், சீசர் போன்ற உலகப் பேரரசர்களின் வரிசையில் தன்னை டிரம்ப் ஒப்பிடத் தொடங்கியிருப்பது அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.